இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் இல்லை...தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்!
வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகு தான் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது
கடந்த 2019ம் ஆண்டு தேர்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 5.01.2025 அன்று முடிவடைகிறது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி அந்தந்த மாவட்ட அரசிதழில் தேர்தல் தொடர்பான பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 27 மாவட்டங்களில் நடத்த வேண்டிய உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு தேர்தல் ஆணையத்தால் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் இன்னும் ஒரு சில வாரங்களில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடலாம் என கூறப்பட்டது.
இந்த நிலையில், வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகு தான் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. எஸ்.சி., எஸ்.டி., மகளிருக்கான வார்டுகளை முடிவு செய்த பிறகே உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.