கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை..

 
கொரோனா பரிசோதனை

தமிழகத்தில்  தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை நாள்தோறும் 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.  அதேபோல் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்கள் கொரோனா குறித்த அச்சத்தால் அரசு மருத்துவமனைகளை நாடுவது அதிகரித்து வருகிறது.  இதனால் மத்திய அரசு அனைத்து தனியார் ஆய்வகங்களிலும்  கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள கடந்த ஆண்டே அனுமதி அளித்தது.  

கொரோனா பரிசோதனை

அதன்படி உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தனியார் ஆய்வகங்களிலும்  கொரோனா பரிசோதனை  செய்யப்படுகிறது. அரசு அறிவுறுத்தலின் படி ஆய்வுக் கட்டணமாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 400 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும். மருத்துவ காப்பீடு  இல்லாதவர்களுக்கு  ரூ.700ம்,வீட்டிற்கு சென்று  பரிசோதனை செய்ய கூடுதலாக  300 ரூபாயும் வசூலிக்கலாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சில தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

கொரோனா பரிசோதனை

இந்நிலையில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார் ஆய்வகங்கள் பரிசோதனையை முறையாக மேற்கொள்வதுடன் முடிவுகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.