வடமாநிலத்தவர் குறித்து வதந்தி பரப்பியது தொடர்பாக 3 பேர் கைது, 11 வழக்குகள் பதிவு - டிஜிபி பேட்டி

 
DGP

வடமாநிலத்தவர்கள் தொடர்பாக வதந்தி பரப்பிய விவகாரத்தில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். 

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்து தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பீகார் முதலமைச்சர் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக குழு ஒன்றை தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார். அந்த குழு தமிழகத்தில் விசாரணை நடத்தியதை அடுத்து அது போலியான வீடியோக்கள் என்பது தெரியவந்தது. இதனிடையே வடமாநிலத்தவர்கள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து இருந்தார். தமிழக அரசின் தொடர் நடவடிக்கை காரணமாக தற்போது அந்த விவகாரம் தனிந்துள்ளது. 

dgp sylendra babu

இந்நிலையில் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாவது: சூழ்நிலை தற்போது நலமாக இருக்கிறது. இருப்பினும் இந்த சம்பவம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. வதந்திகள் பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்துள்ளோம். சிலரை கைது செய்வதற்கு போலீசார் குழு பல்வேறு இடங்களில் முகாமிட்டுள்ளனர். ஒரு சிலர் தலைமறைவாகியுள்ளனர். சிலர் நீதிமன்றத்தை நாடி உள்ளனர். பெருமளவில் வதந்தி வீடியோக்கள் குறைந்துள்ளது. இருந்தாலும் இது ஒரு அசாதாரணமான சூழலை உருவாக்கும் என்பதால் வட மாநில தொழிலாளர்களுடன் அடிக்கடி உரையாடல் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தொழிலதிபர்களிடம் கூறியிருக்கிறோம். காவல்துறை அதிகாரிகளும் அவர்களிடம் சென்று பேசி அவர்களுக்கு தைரியம் கொடுத்துள்ளனர். 

வட மாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் சிசிடி கேமராக்கள் வைக்கவும் ரோந்து வாகனங்கள் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வட மாநில தொழிலாளர்களின் பெற்றோர், உறவினர்களுக்கு இங்குள்ள சூழலை விளக்கவும் அவர்களுக்கு புரியும் வகையிலும் அவர்களது மொழியில் தகவல் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏன் இது போன்ற போலி வீடியோக்கள் பரப்பப்பட்டது என்பது விசாரணையில் தெரியவரும். இவ்வாறு கூறினார்.