பாஜகவினர் ஆட்சி அதிகார வெளிச்சத்தில் ஆட்டம் போடுகிறார்கள் - கே.எஸ்.அழகிரி விமர்சனம்

 
Ks Azhagiri

வருகிற தேர்தலில் பாஜகவால் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாது என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்தியில் ஆட்சிக்கு வந்த போது விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவோம் என்றார்கள். செய்ய முடிந்ததா? சமச்சீரான விளைபொருள் விலையை நாடுமுழுவதும் இந்திரா ஆட்சி காலத்தில் நிர்ணயித்தார். அது விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் பலன் கொடுத்தது.இவர் ஆட்சிக்கு வந்த பிறகு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்றால் அது வளர்ச்சியின் அடையாளம். ஆனால் இருந்த வேலை வாய்ப்புகள் அல்லவா பறிபோய் இருக்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி பொருளாதாரம் சார்ந்தது. அந்த பொருளாதாரத்துக்கு கைகொடுப்பது எரி பொருள். அதன் விலை கட்டுக்குள் இருந்தால் தான் பொருளாதாரத்தில் பாதிப்பு வராது. 

ks alagiri

மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணை விலை 108 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் ரூ.70-க்கும், சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.400-க்கும் வினியோகிக்கப்பட்டது. ஆனால் இன்று கச்சா எண்ணை விலை 70 டாலர் தான், ஆனால் பெட்ரோல் ரூ.100-க்கும், சமையல் கியாஸ் ரூ.1100-க்கும் விற்கப்படுகிறது. வரலாறு காணாத வகையில் இவற்றிற்கான விலையை குறைத்து இருந்தால் மோடி பெருமைப்படுவதில் அர்த்தம் உண்டு. மக்களை கசக்கி பிழிந்து விட்டு நாடு வளர்ச்சி அடைந்துவிட்டது என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தமிழ்நாட்டில் பா.ஜனதாவுக்கு அமைப்பும் கிடையாது. மக்கள் ஆதரவும் கிடையாது. இப்போது மத்தியில் இருக்கும் ஆட்சியின் அதிகார வெளிச்சத்தில் ஆட்டம் போடுகிறார்கள். இது வெற்றிக்கு உதவாது. வருகிற தேர்தலில் ஒரு இடத்தில் கூட அவர்களால் வெற்றிபெற முடியாது. இவ்வாறு கூறினார்.