ஐடி துறையில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடிக்க நடவடிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 
cm stalin

ஐடி துறையில் முதல் இடத்தை பிடிக்க திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற பிரிட்ஜ்-23  தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அவர் பேசியதாவது: இத்தகைய கருத்தரங்குகள். மாநாடுகள், பயிற்சிகள் வாயிலாக, தமிழ்நாட்டிலுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளவும், மாநிலத்தில் நிலவும் திறன் இடைவெளி குறைந்திடவும் வழிவகை செய்யும். தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் சூழ்நிலையில், அதன் வளர்ச்சியை தக்கவைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், அதை விரைவுபடுத்தவும் தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது. இதனால் தமிழ்நாடு பொருளாதார வளம், அதிகரித்த வேலைவாய்ப்பு என இரட்டைப் பலன்களை அடையமுடியும்.உள்கட்டமைப்பு சேவைகளை வழங்குதல் மற்றும் மாநில குடும்ப தரவுத் தளம், பிளாக்செயின் மற்றும் இ-அலுவலகம் மூலம் SMART நிறுவனத்தை நிறுவுவதன் மூலமாக சேவைகளை மேம்படுத்திட இயலும் என்பதால், தமிழ்நாடு அரசு அதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. 

stalin

இதன்மூலம் குடிமக்கள் விரைவில் காகிதமில்லா, வெளிப்படைத்தன்மையுடனான சேவைகளை பெற இயலும். "தரவுகள்" எனப்படும் "Data"தான் இந்தக் காலத்தின் புதிய எரிபொருள். தமிழ்நாடு Data Centre பாலிசியை வெளியிட்டதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள் Date Centre உட்கட்டமைப்பை உருவாக்க உதவும் முதல் நோக்கம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப சூழலை மேம்படுத்திடதகவல் தொழில்நுட்பத் துறை, கல்வித்துறை மற்றும் நாஸ்காம் ஆகியவற்றில் சிறந்த அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களைக் கொண்டு. "எதிர்காலத்திற்கான ஆலோசனைக் குழுவை" மாநில அரசு அமைத்துள்ளது. தமிழ்நாட்டில், துடிப்பான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்கிட, திறன் இடைவெளியைக் குறைப்பது என்பது மிகவும் முக்கியமானது.  

ஐடி துறையில் முதல் இடத்தை பிடிக்க திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இளைய தலைமுறை தொழில் நுட்பத்தை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்ப கொள்கையை முதலில் உருவாக்கியது திமுக அரசு தான். கையடக்க தொலைபேசியில் அனைத்து புத்தகங்களும் கிடைக்கின்றன. எல்லா துறைகளிலும் தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் தகவல் தொழிநுட்பத்துக்கு வித்திட்டவர் கருணாநிதி. தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. தரவுகள் தான் இந்த காலத்தின் முக்கிய எரிபொருள், அதற்காக புதிய கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. வதந்திகளை பரப்பி, சட்டம் ஒழுங்கை கெடுக்க சிலர் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு கூறினார்.