திமுக-விற்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் தீர்ப்பு - தமிழக பாஜக அறிக்கை

 
BJP

தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கொண்டாடித் தீர்க்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக பாஜக இருகரம் கூப்பி வரவேற்று மகிழ்கிறது என தமிழக பாஜக தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு விருதுநகரில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த நமது நாட்டின் தேசிய உருவகமான “பாரத மாதா” சிலையை, தமிழக வருவாய் துறை அதிகாரிகள் இரவோடு இரவாக மதிலேறி குதித்து  சட்டவிரோதமாக அப்புறப்படுத்திய தேசவிரோத செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பரம்பரைப் பரம்பரையாக மக்களைப் பிளவுபடுத்தி, தேசத்தின் மீதான வெறுப்புணர்வை விதைத்து வரும் அரிவாலயம் அரசு , தேச ஒற்றுமையைப் பறைசாற்றும் பாரத மாதா-வின் சிலை தமிழகத்தில் நிறுவப்பட்டதைக் கண்டு பதறத் தானே செய்வார்கள்?

ஆனால், தேச ஒருமைப்பாட்டிற்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்க்க, தேசத்தையும் தேச நலனையும் நேசிக்கும் பாஜக  இருக்கிறது என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள் போலும். கயவர்களால் கலங்கப்படுத்தப்பட்ட நமது பாரத அன்னையின் சிலையையும் பெருமையையும் மீட்டெடுக்க, பல சாலைப் போராட்டங்களையும் சட்டப் போராட்டத்தையும் முன்னெடுத்த தமிழக பாஜக , விரோதிகளை வீழ்த்தி இன்று வெற்றிவாகை சூடியுள்ளது. நமது இந்திய இறையாண்மையை சீர்குலைக்க முயலும் தேசவிரோதிகளின் கூடாரமான திமுக-விற்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் தீர்ப்பு வழங்கிய, சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி திரு. N. ஆனந்த் வெங்கடேஷ் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். 


இமயம் முதல் குமரி வரை படர்ந்து விரிந்து ஒற்றுமையைப் பறைசாற்றும் நமது பாரதத்தை “திராவிடம்” என்ற பெயரில் துண்டு துண்டாக கூறு போட துடிக்கும் இந்த திராவிட மாடல் அரசு, எங்கெல்லாம் சமூக சமத்துவம் பெருமையுடன் தலை நிமிர்கிறதோ அங்கெல்லாம் தங்களின் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது இனியும் தமிழகத்தில் எடுபடாது என்பதற்கு இந்த தீர்ப்பு மாபெரும் சான்று. எனவே, தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கொண்டாடித் தீர்க்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை, இருகரம் கூப்பி வரவேற்று மகிழ்கிறது பாஜக என தெரிவிக்கப்பட்டுள்ளது.