10ம் வகுப்பு தமிழ் தேர்வில் 36,000 மாணவர்கள் தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது- அண்ணாமலை

 
Annamalai

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 36 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்.6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்ட நிலையில்  பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 91.39% பேர் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் மாணவர்களை விட மாணவியர் 6.50 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் மாணவியர்கள் 4,30,710 பேரும் மாணவர்கள் 4 லட்சத்து 4 ஆயிரத்து 904 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆகவும் பதிவாகியுள்ளது.  தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட தேர்வுத்துறை,  ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடைபெறும் என்றும் இதற்கு மே 23ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 36 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜகவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், தமிழக அரசின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, தமிழ் மொழித் தேர்வில் 36,000 மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.  தமிழகத்தில் கல்வித் திட்டத்தின் தரமும், கற்பித்தல் தரமும் குறைந்திருப்பதையே இது காட்டுகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.