கூட்டணி விவகாரத்தில் எனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன் - அண்ணாமலை திட்டவட்டம்

 
Annamalai

காவல் அதிகாரியாக இருந்த போது சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்துவிட்டு தற்போது கடன்காரனாக இருக்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி வைக்க கூடாது, தனித்து போட்டியிட வேண்டும் என கூறினார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அடிப்படை தொண்டனாக பணியாற்றுவேன் என கூறினார். இந்த கருத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலையின் இந்த கருத்துக்கு அதிமுக தரப்பில் எதிர்வினையாற்றப்பட்டது.  

annamalai

இந்நிலையில் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கூட்டணி பற்றி முடிவெடுக்க எனக்கு அதிகாரமில்லை. கட்சி தலைமைதான் முடிவெடுக்கும். நான் எந்த அரசியல் கட்சிக்கும், அரசியல் தலைவருக்கும் எதிரி இல்லை. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. கூட்டணி குறித்து பேசும் நேரம் விரைவில் வரும். தேர்தலை சந்திக்கும் விவகாரத்தில் என் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன்.  கட்சிக்குள் நான் பேசியதாக கூறப்படும் கருத்துக்கள் விவாதத்தை ஏற்படுத்தியிருப்பது நல்லதுதான். எனது நிலைப்பாட்டில் 50 சதவீத பேருக்கு உடன்பாடும் 50 சதவீத பேருக்கு எதிர்கருத்தும் உள்ளது. வரும் காலங்களில் மிக தீவிரமாக பேச உள்ளேன். பணம் இல்லாத அரசியலை முன்னெடுத்தால் மட்டுமே தமிழ்நாடு வளர்ச்சியடையும். 2 ஆண்டுகள் தலைவராக இருந்த அனுபவத்தில் பேசுகிறேன். என்னுடைய கருத்து குறித்து டெல்லி மேலிட தலைவர்கள் பலரிடமும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசி வருகிறேன். அரசியல் களத்தில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நான் காவல் அதிகாரியாக சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்துவிட்டு தற்போது கடன்காரனாக இருக்கிறேன். இவ்வாறு கூறினார்.