தமிழக ஆளுநருடன் அண்ணாமலை சந்திப்பு - திமுக அரசு மீது அடுக்கடுக்கான புகார்

 
annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான பாஜக குழுவினர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதாக விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் இரண்டு காவல் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் தொடர்பான அதிரடி வேட்டை நடத்தப்பட்டு சுமார் 3000 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் உயிரிழந்ததை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மற்றும் அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பானது 20 நிமிடம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது  மனு ஒன்றையும் அளித்தனர். அதில், தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் நேரடியாக தலையிட்டு மதுபானம் தொடர்பான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இதேபோல் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க முதலமைச்சருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.