அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்தால் பதவியை ராஜினாமா செய்வேன் - அண்ணாமலை பரபரப்பு பேச்சு

 
Annamalai

அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்தால் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழக பாஜக துணை தலைவர்  சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் நாராயணன் திருப்பதி, பாஜக எம்.எல்.ஏக்கள் வானதி சீனிவாசன், காந்தி, சரஸ்வதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை அதிமுக கூட்டணி குறித்து பேசிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். வருகிற தேர்தலில் அ.தி. மு.க. உடன் கூட்டணி என்று முடிவு எடுத்தால், எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். சாதாரண தொண்டனாகவே கட்சி பணிகளை செய்வேன்.  பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன். இவ்வாறு கூறினார். ஏற்கனவே அதிமுக-பாஜக கூட்டணியில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அண்ணாமலையின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.