சிறப்பாக பணியாற்றிய பழனிவேல் தியாகராஜனை மாற்றியது ஏன்?- அண்ணாமலை கேள்வி

 
Annamalai

தமிழக நிதி அமைச்சராக இருந்து சிறப்பாக பணியாற்றிய பழனிவேல் தியாகராஜனை மாற்றியது ஏன்? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக சொத்து பட்டியல் என்ற பெயரில் ஆவணங்களை வெளியிட்டு குற்றசாட்டுகளை முன் வைத்தார். இந்நிலையில், அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் மனு தாக்கல் செய்தார். அதில் அண்ணாமலை வெளியிட்ட கருத்துக்கள் பொய்யானது. எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து கூறியதாவது:  டி.ஆர் பாலு என்மீது வழக்கு தொடர்ந்திருப்பது நகைப்புக்குரியது. என் மீது தொடரப்பட்ட வழக்குகளை சட்டரீதியாக சந்திப்பேன். வழக்குகளுக்கு பயந்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை நிறுத்த மாட்டேன் என கூறினார். தொடர்ந்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட்டது குறித்து பேசிய அண்ணாமலை, சிறப்பாக பணியாற்றிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை மாற்றியது ஏன்? என கேள்வி எழுப்பினார். ஆடியோ காரணமாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துறை மாற்றப்பட்டது தவறு. ஆடியோவில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது உண்மை தான்.  பிடிஆர் ஆடியோவை வெளியிட்டது தொடர்பாக என் மீது வழக்கு தொடருங்கள்.வழக்கு தொடர்ந்தால், ஆடியோவின் உண்மை தன்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும் என கூறினார்.