செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் - அண்ணாமலை பேட்டி

 
K Annamalai

அமைச்சராக இருந்தால் அவர் மீதான விசாரணை நேர்மையாக நடைபெற வாய்ப்பு இல்லை என்பதால் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 
 
கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மற்றும் அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பானது 20 நிமிடம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது  மனு ஒன்றையும் அளித்தனர். அதில், தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் நேரடியாக தலையிட்டு மதுபானம் தொடர்பான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இதேபோல் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க முதலமைச்சருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில்,  ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும். விஷச்சாராய மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான விசாரணை நேர்மையாக நடைபெற வாய்ப்பு இல்லை. அரசியலமைப்பு சட்டத்தை அமைச்சர் மீறும்போது, சட்டத்தை காக்கும் பொறுப்பு ஆளுநருக்கு உண்டு. தமிழ்நாடு காவல்துறை சுதந்திரமாக செயல்படவில்லை. கைகள் கட்டப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து முதலமைச்சரிடம் விரைவில் வெள்ளை அறிக்கை வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.