டி.ஆர். பாலு என் மீது வழக்கு தொடர்ந்திருப்பது காமெடியாக உள்ளது - அண்ணாமலை கிண்டல்

 
Annamalai

டி.ஆர்.பாலு தன் மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக சொத்து பட்டியல் என்ற பெயரில் ஆவணங்களை வெளியிட்டு குற்றசாட்டுகளை முன் வைத்தார். இதில் திமுகவின் மூத்த நிர்வாகிகள் , அமைச்சர்கள் என  பலரின் பெயர்கள் இடம் பெற்று இருந்தது. இந்த சூழலில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு,  பாஜக தலைவர் அண்ணாமலை என்னை பற்றி தகவல் வெளியிட்டதுக்கு 48 மணி நேரம் கெடு கொடுத்து நோட்டீஸ் வழங்கினோம். பதில் இல்லை. எனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முதலில் கிரிமினல் வழக்கும்,  அதைத் தொடர்ந்து சிவில் வழக்கும் தொடுக்க உள்ளேன் என கூறியிருந்தார். இந்நிலையில் அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் மனு தாக்கல் செய்தார். அதில் அண்ணாமலை வெளியிட்ட கருத்துக்கள் பொய்யானது. எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:  டி.ஆர் பாலு என்மீது வழக்கு தொடர்ந்திருப்பது நகைப்புக்குரியது. என் மீது தொடரப்பட்ட வழக்குகளை சட்டரீதியாக சந்திப்பேன். வழக்குகளுக்கு பயந்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை நிறுத்த மாட்டேன். அமைச்சர் டிஆர்பி ராஜாவின் குடும்பத்தினர் பெரிய நிறுவனங்களை நடத்தி வருவதால் அவருக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பிடிஆர் ஆடியோவை வெளியிட்டது தொடர்பாக என்மீது வழக்கு தொடருங்கள். வழக்கு தொடர்ந்தால் ஆடியோவின் உண்மை தன்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும். ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்ற முறைகேடு காரணமாக நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.