பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது தான் திமுகவின் வேலை - அண்ணாமலை

 
Annamalai

வட மாநிலத்தவர் தொடர்பான பிரச்னையை திசை திருப்பவே என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர்.எஸ்.பாரதி அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இரட்டை வேடங்கள் போடுவது என்பது திமுகவினருக்கு இயல்பானது.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தமிழகம் அமைதிப்பூங்கா என்று, தொட்டிலையும் ஆட்டி வைக்கும் இரட்டை வேடம் திமுகவிற்கு கைவந்த கலை. ‛ஹிந்தி தெரியாது போடா' என்று முதல்வரின் மகன் டி- ஷர்ட் கலாசாரத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் துவங்கி வைக்க, .விமான நிலையத்தில் என்னிடம் ஹிந்தியில் பேசினார்கள் என்று முதல்வரின் தங்கை, திமுகவின் எம்பி ஒரு பொய்யான புகாரை வழங்கி, வட மாநிலத்தவருக்கு எதிரான வன்மத்தைத் துவங்கி வைத்தார். 

தற்போது சமூகங்களில் உலவும் பல பொய்யான செய்திகளுக்கும் இவையெல்லாம் காரணங்களாக இருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது.  வட மாநிலத்தவர் தொடர்பான பிரச்னையை திசை திருப்ப இப்போது என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பூரில் விரும்பத்தகாத சம்பவம் நடந்த போது போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?. பிரிவினையில்லாத நல்லிணக்கத்தை நாட்டுப்பற்றுடன் கூடிய தேச ஒற்றுமையை பா.ஜ.க தொடர்ந்து வலியுறுத்தும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.