தமிழக அரசு தூக்கத்திலிருந்து விழித்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

 
Annamalai

தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை தலைதூக்கியிருப்பது திமுக அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூரியுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் என்ற கிராமத்தில் நேற்று கள்ளச்சாராயம் குடித்த 16 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக 16 பேரும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துமனைகளுக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளார் ஸ்ரீநாதா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் எக்கியார் குப்பம் கிராமத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மரக்காணம் பகுதியில் கள்ளச் சாராயம் உட்கொண்டதால், சுரேஷ், சங்கர், தரணிவேல் எனும் மூன்று பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.  மேலும், கவலைக்கிடமான நிலையில் 16 பேர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தெரிகிறது. அவர்கள் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.  டாஸ்மாக் மூலம் கட்டுப்பாடற்ற சாராய விற்பனை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, தற்போது கள்ளச் சாராய விற்பனையும் தலைதூக்கியிருப்பது திமுக அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது. உடனடியாக தமிழக அரசு தூக்கத்திலிருந்து விழித்து, கள்ளச் சாராய விற்பனையை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.