ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற சட்டப்பேரவைக்கு முழு அதிகாரம் உள்ளது - சபாநாயகர்

 
appavu

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற தமிழக சட்டமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்க பேரவைக்கு அதிகாரமில்லை என்று எந்த சட்டத்தை வைத்து ஆளுநர் கூறுகிறார் என்று தெரியவில்லை. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்ற தமிழக சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆளுநர் சரியான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கலாம் என்பதே என் கருத்து. 

ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு ஆளுநர் தாமதம் ஏற்படுத்தியதற்கான காரணம் தெரியவில்லை. அவசர சட்டத்திற்கும் சட்ட மசோதாவிற்கும் எந்த வித்தியாசமுமில்லை. ரம்மி என்பது 'ஸ்கில் கேம்', இல்லை 'கில் கேம்' (Kill Game) என்று நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்க அவருக்கு ஏதோ அழுத்தம் இருக்கிறது. அந்த அழுத்தத்தின் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு கூறினார்.