தமிழிசை கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஒலிநாடாவில் இசைக்கப்பட்டதால் சர்ச்சை

 
தமிழிசை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 9வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 432 பட்டதாரிகளுக்கு பட்டங்களையும் அண்ணா பல்கலைக்கழக தரவரிசையில் முதல் இடம் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகளையும், தங்க நாணயங்களையும் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “ஸ்டாண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியாவில் உலகத்தில் 3வது இடத்தில் இருக்கிறது. 550மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒரு ஸ்டார்ட் அப் உள்ளது இது இந்தியாவின் பிரம்மாண்ட வளர்ச்சி. பொறியியல் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் அரசு ஏற்படுத்தி தருகிறது. மாணவர்கள் அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் தமக்கு எல்லையே கிடையாது எனவும், தமிழகத்திற்கு வரும் போது எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன், தமது பணிக்கு எல்லை கிடையாது.  தமிழ்நாட்டில் கருத்து சொல்ல முழு உரிமை உள்ளது, தமக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது” எனக் கூறினார்.

முன்னதாக தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றை ஒலி நாடாவில் இசைக்காமல் பயிற்சி பெற்றவர்களை கொண்டு பாட வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்து பின்பற்றப்பட்டு வரும் நிலையில் பொன்னேரி அருகே தனியார் கல்லூரியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து ஒலி நாடாவில் இசைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது