டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசு பணக்கார கொசு - தமிழிசை

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அமைக்கபட்டுள்ள, டெங்கு வார்டுகளில் ஆளுநர் தமிழிசை திடீர் ஆய்வு மேற்கொண்டார். டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசு பணக்கார கொசு. ஏசி போன்ற இடங்களில் இருக்கும் என்பதால், கொசு கடிப்பதை தடுக்க சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை பேட்டி அளித்தார்.
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் இறந்துள்ளதை தொடர்ந்து அரசு பொது மருத்துவமனையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் ஏற்பாடுகளை ஆளுநர் தமிழிசை இன்று மதியம் ஆய்வு செய்தார். அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் உடல்நலம் விசாரித்தார்.நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் உணவுகள் குறித்து, சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு விளக்கினார்
ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை, "அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு பெண்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. 2 ஆண்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். எலிசா பரிசோதனையால் தான் டெங்கு பாதிப்பு தெரியவரும் என்றார். நம்பிக்கையுடன் காலத்தோடு அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் வர வேண்டும். காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவர்களை அனுக வேண்டும் என கூறிய தமிழிசை,சில டெங்கு நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படும். அதனால் போதிய ரத்தம் தயாராக வைத்திருக்க மருத்துவமனைகளை அறிவுறுத்தியுள்ளோம். இது பணக்கார கொசு.ஏசி போன்ற இடங்களில் இருக்கும். அதனால் பொது மக்கள் இயக்கமாக கொசு கடிப்பதை தடுக்க, சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் ” என்றார்.