"நான் என் அப்பா தோளிலோ, தாத்தா தோளிலோ ஏறி வரவில்லை!"- உதயநிதிக்கு தமிழிசை பதில்

 
w

நான் என் அப்பா தோளிலோ, தாத்தா தோளிலோ ஏறி வரவில்லை என துணை முதல்வர் உதயநிதிக்கு தமிழிசை பதில் அளித்துள்ளார்.

Udhayanidhi Stalin VS Tamilisai Soundararajan: 'அக்கா தமிழிசை அவர்களே.. அது  கிரி வலம் அல்ல.. சரி வலம்'.. பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!

நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது! அக்கா அவர்களே, திருவண்ணாமலையில் ‘கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் ‘சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல  –  ‘சரி’ வலம் ஓடாத தேரை ஓட வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு திருப்பணிச் செய்தவர் எங்கள் முதல்வர்! ‘எல்லோருக்கும் எல்லாம்’ என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும். நியாயம் தானே...! நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது. ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் - அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு பதில் அளித்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “உதயநிதி ஸ்டாலின் ‘நான் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்’ என்று சொல்கிறார். நான் என் அப்பா தோளிலோ, தாத்தா தோளிலோ ஏறி வரவில்லை. நானாக தட்டுத் தடுமாறி, தடம் மாறாமல் மக்களை சந்தித்து வருகிறேன். என்றைக்காவது ஒருநாள் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். எல்லோருக்கும் எல்லாம் என்பது உங்களது கொள்கையானால் நீங்கள் எப்படி துணை முதலமைச்சர் ஆனீர்கள்? பாஜக விவசாயிகளுக்கு எதிரான கட்சி என வட இந்தியாவில் ஒரு பொய்யான பிம்பம் இருப்பதுபோலவே தமிழுக்கு எதிரான கட்சி என தமிழ்நாட்டில் ஒரு பிம்பம் இருக்கிறது. எனது பெயரில் மட்டுமல்ல, எனது உயிரிலும் தமிழ் உள்ளது. இனிமேலாவது இந்த மொழி அரசியலை திமுக கைவிட வேண்டும். மொழி அரசியலை விடுத்து ஆக்கப்பூர்வமான அரசியலுக்கு வாருங்கள் என திமுகவை கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.