ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம்- பாஜவுக்கு சம்மந்தம் இல்லை: தமிழிசை சௌந்தரராஜன்

 
tamilisai

திருவள்ளுவரின் காவியை சிலர்  வெண்மையாக்கினர், நாங்கள் மீண்டும் வெண்மையை காவியாக்குகிறோம் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Image

சென்னை அமைந்தகரையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், “தேர்தலில் எப்படி போட்டியிட்டோம் ,எப்படி வெற்றி பெறப்போகிறோம் என்பதற்கான கூட்டம் இன்று நடைபெற்றது. ஜூன் 4-ம் தேதி மத்தியிலும் தமிழகத்திலும் பாஜகவிற்கு மிகப்பெரும் வெற்றி காத்திருக்கிறது. எனவே பாஜகவினர் உற்சாகத்துடன் உள்ளோம். அருதிப் பெரும்பான்மை இடங்களை தற்போதே தாண்டிவிட்டோம். மக்களிடத்தில் வேற்றுமையை உருவாக்கியது திமுகதான். இந்து மத விழாக்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன்..? அவர்களது குறிக்கோள் பிரதமர் மாநிலங்களை பிரித்தாளுகிறார் , தமிழகத்திற்கு எதிராக இருக்கிறார் என மாயத்தோற்னத்தை ஏற்படுத்த பார்க்கிறார். 

தமிழ் மக்கள் மீது பிரதமர் எப்போதும் போல அன்புடன்தான் இருக்கிறார். பாஜகவிடம் மதவாதம் இல்லை, மனித வாதம்தான் இருக்கிறது. பிரதமரின் திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது. தமிழகத்தில் பிரதமரின் திட்டங்களை மறைக்கின்றனர். தோல்வி பயத்தில் நாங்கள் இருப்பது போன்ற தோற்றத்தை இண்டியா கூட்டணி உருவாக்கப் பார்க்கிறது. பாஜக தலைமையில் வலுவான அரசு மத்தியில் வரும். பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ள சிறுபான்மையினருக்கு சில பல்கலைகழகங்களில்  50 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது. ஐதராபாத் போன்ற இடங்களில் இதனால் இந்துக்கள் பாதிக்கப்படுகின்றனர். தேர்தல் நேரத்தில் 4 கோடி ரூபாய் பிடிபட்டதை பாஜகவின் பணம் என அரசியல்  காழ்ப்புணர்வால் பொய் கூறுகின்றனர் . பிடிபட்ட பணத்திற்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

பிரதமரின் மதிப்பு மரியாதை பன்மடங்கு உயர்ந்துள்ளது. உலகின் பல நாட்டுத் தலைவர்களும் அவரை பாராட்டுகின்றனர். இந்தியாவின் ஒரே முகமாக மோடி இருக்கிறார். திருவள்ளுவரின் காவியை சிலர்  வெண்மையாக்கினர், நாங்கள் மீண்டும் வெண்மையை காவியாக்குகிறோம். தொடக்கத்தில் திருவள்ளுவரின் படங்கள்  காவி நிறத்தில்தான் இருந்தது” என்றார்.