ரூ.2,000 நோட்டை டாஸ்மாக்கில் வாங்குகிறோம் என்பதே மிகப்பெரிய அறிவிப்பு- தமிழிசை

 
tamilisai

கர்நாடகப் படுதோல்வியை மறைக்கவே மத்திய பாஜக அரசு ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

Image

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் யுவா சங்கமம் மேற்குவங்க மாணவ, மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியின் போது மாணவர்கள் சிலர் ஆளுநர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, “பிரதமர் முயற்சியினால் கல்வி அமைச்சகம் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து மாணவ, மாணவிகளை இங்கு அனுப்புகின்றனர். இது நல்ல அனுபவமாக இருக்கிறது. தெலுங்கானாவில் கூட நாளை மறுநாள் நான் மாணவர்களை சந்திக்கின்றேன். வெவ்வேறு இடங்களில் இருந்து மாணவர்கள் வரும் போது மாநிலத்தை பற்றியும், இங்குள்ள கலாச்சாரத்தை பற்றியும் தெரிந்து கொண்டு நாமெல்லாம் ஒன்றாக பணியாற்ற வேண்டும் என்ற ஒற்றுமை உணர்வை கொடுப்பதற்கு உதவியாக இருக்கிறது. புதிய கல்வி கொள்கை என்ன சொல்கிறது என்றால் ஆரம்ப கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டும், அப்போது தான் இன்னும் அறிவு வளர்ச்சி வரும் என்கிறது. கல்வித்துறையில் மேலும் பல முயற்சிகளையும், முன்னேற்பாடுகளையும் செய்வதற்கு புதிய கல்வி கொள்கை மிகவும் உதவி கரமாக இருக்கிறது.

PT desk

பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். அதிகம் படித்த பெண்கள் அரசியலுக்கு வந்தால் அரசியல் தூய்மையாகும். அரசியலில் முன்னேற பல சிரமங்களை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும். 2000 ரூபாய் நோட்டை டாஸ்மாக்கில் வாங்குகிறோம் என்று சொன்னதுதான் உலகத்திலேயே மிகப்பெரிய அறிவிப்பு. கர்நாடகப் படுதோல்வியை மறைக்கவே மத்திய பாஜக அரசு ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. இதில் கருத்து சொன்னால் அரசியல் கருத்தாகிவிடும். நல்ல முயற்சிக்காகத்தான் எல்லாம் கொண்டுவரப்படுகிறது” என்றார்.