‘திராவிட மாதிரி’ன்னு சொல்லுங்க.. தாய்மொழியோடு பிற மொழியையும் கற்க வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்..

 
தமிழிசை

அனைவரும் தாய்மொழியைக் கற்றுக்கொண்டு, பிறமொழியையும் கற்றுக்கொள்ள வேண்டும் என தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் நீலம்பூர் அருகேயுள்ள தனியார் கல்லூரியில்  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற  தெலுங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜன், கோவை தூய்மையான நகரங்களில் ஒன்றாக திகழ்வது மகிழ்ச்சியளிப்பதாக  தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்கள் அதிகம் என உலக அமைப்புகள்  தவறான தகவல்களை கூறி வருவதாகவும், மத்திய அரசு இறப்பு  இறப்பு விகிதங்களை சரிவர கையாண்டு வருவதாகவும் தமிழிசை தெரிவித்தார்.   

தமிழ் மொழி

தொடர்ந்து பேசிய அவர்,  10 கோடிக்கு அதிகமாக  இன்றைய இளைஞர்கள் போதை பழக்கத்தில் சிக்கியுள்ளதாகவும்,   இளைஞர்கள் போதை ஒழிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களிடம் கொண்டு செல்ல முழுமையாக செயல்படுவதாகவும், மத்திய அரசும் அதற்கான ஏற்பாட்டைச் செய்த வருவதாகவும் குறிப்பிட்ட அவர். இதற்கு மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தார்.  அத்துடன் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தமிழிசை 

தமிழக அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்ட அவர்,  தமிழக அரசு . இன்னும் பல நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல  பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  மேலும் திராவிட மாடல் என சொல்வதற்கு பதிலாக தமிழில்,  திராவிட மாதிரி என சொன்னால் நன்றாக இருக்கும் என்று கூறிய அவர், அனைவரும் தாய் மொழியை முதன்மையாகக்  கற்றுக்கொள்ள வேண்டும்  என்றும்,  தாய் மொழியைக்  கற்றுக்கொள்வது தாய் பாலை பிறந்த குழந்தை முதலில் அருந்துவது போன்றது என்றும்  குறிப்பிட்டார். தாய் மொழியை கற்றுக் கொண்டு பின்னர்  பிற மொழியையும்  அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.