"சின்ன பசங்கள பாத்தாச்சும் திருந்துங்கயா" - தமிழிசை கோபம்... என்ன பொசுக்குனு இப்டி சொல்லிட்டாங்க!

 
தமிழிசை

புதுச்சேரியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறை மூலம் பள்ளிகளில் தடுப்பூசி முகாம்கள் நடப்படுகின்றது. அதன் ஒரு பகுதியாக வானரப்பேட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் தடுப்பூசி முகாமினை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தொடங்கி வைத்தார். அவர் முன்னிலையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குழந்தைகள் தடுப்பூசி பற்றி புரிந்துகொண்டு தயக்கம் இல்லாமல் போட்டுக்கொள்கிறனர். ஆனால் பெரியவர்கள்தான் தடுப்பூசி செலுத்த தயங்குகிறார்கள். தடுப்பூசி போடாமல் இருப்பது மன்னிக்க முடியாதது. ஆப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் தடுப்பூசி அதிகம் போடாடததுதான். இந்த உண்மையை நம் நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தடுப்பூசியைப் செலுத்திக்கொள்ள வற்புறுத்தப்படுகிறது. 


தடுப்பூசி போட்டவர்களை எந்த வகை அபாயமான கொரோனாவும் தாக்குவதில்லை என்பது அறிவியல் ஆராய்ச்சி. புதுச்சேரி முதல்வரும் தடுப்பூசியை ஊக்கப்படுத்தி வருகிறார். புதுச்சேரி 100 சதவீத தடுப்பூசியை நோக்கி போய் கொண்டிருக்கிறது. தற்போது 75 சதவீதம் முதல் டோஸும், 50 சதவீதத்துக்கும் மேல் 2ஆவது டோஸும் போடப்பட்டிருக்கிறது. தடுப்பூசி போடாமல் இருக்கின்ற ஒரு லட்சம் பேரும் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். புதுச்சேரி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற அக்கறை அரசுக்கு உண்டு.

இந்தியா முழுவதும் கொரோனா மீண்டும் அதிகமாக பரவி வருவதால் புதுச்சேரியில் நடக்க இருந்த தேசிய இளைஞர் விழாவை, காணொளி காட்சி மூலமாக பிரதமர் தொடங்கி வைப்பார். புதுச்சேரியில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. 50 சதவீதம் வரை கூட்டத்தை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆசிரியர்களும், பெற்றோரும் நம்புவதால் பள்ளிகள் செயல்படுகின்றன. பிரச்சினை ஏதேனும் இருந்தால் பள்ளிகள் மூடுவது குறித்து பரிசீலனை செய்வோம். மேலும், தற்போது பள்ளிகள் நடைபெற்றால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட ஏதுவாக இருக்கும்" என்றார்.