பரபரக்கும் தமிழக அரசியல் களம்..! தவெகவுக்குப் படையெடுக்க போகும் அரசியல் தலைகள்..?
நடிகராக இருந்த விஜய் தற்போது அரசியல்வாதியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அரசியலிலும் அதே திருவிழாக்கோலம் களை கட்டியுள்ளது. பெரிய பெரிய கட்சிகளுக்கெல்லாம் பெரும் மிரட்டலாக காட்சி தருகிறார் விஜய். அவரைப் பற்றிப் பேசாத அரசியல் தலைவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தினசரி விஜய்யும் அவரது கட்சியும் அதகளம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில்அதிமுகவின் மிக முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்ஜிஆர் காலம் முதல் ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவை வரை இடம் பெற்றிருந்தவருமான சிறந்த அரசியல் வியூகவாதி (Strategist) செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். முன்னாள் எம்எல்ஏவான செங்கோட்டையனுடன், முன்னாள் எம்.பி.யான திருப்பூர் சத்யபாமாவும் இணைந்துள்ளது தவெகவுக்குப் புதிய பலத்தையும், நிறத்தையும் அளித்துள்ளது. பல்வேறு கட்சிகளில் இருந்து அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களைக் கட்சிக்குள் கொண்டு வருவதன் மூலம், தொண்டர்களாக மாறும் தனது ரசிகர்களை வழிநடத்தவும், கட்சியைப் பலப்படுத்தவும் விஜய்க்கு இந்த நகர்வு உதவும் என்று அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அந்த வகையில் விரைவில் அடுத்தடுத்து பல்வேறு கட்சிகளில் ஒதுக்கப்பட்டுள்ள மூத்த தலைவர்கள் பலர் தவெக பக்கம் திரும்பலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.


