தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு லாபம் தான் - மக்களவை இடங்கள் 39-லிருந்து 59-ஆக உயரும் - அமித்ஷா..!

 
1

தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்து மக்களவையில் அமித் ஷா விளக்கம் அளித்துப் பேசுகையில், "தொகுதி மறுசீரமைப்பு மசோதா, அரசமைப்பு சட்ட திருத்த மசோதா ஆகியவற்றால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும், தென்மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படும் என்ற கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உண்மையில், தொகுதி மறுசீரமைப்பால் தென்மாநிலங்கள் பயன்பெறும்.

மக்களவையில் மொத்தம் 543 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 39 பேர். அதாவது, 7.18 சதவீதம் பேர் உள்ளனர். தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 816 ஆக அதிகரிக்கும். அப்போது, தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 59-ஆக அதிகரிக்கும். அதாவது 7.23 சதவீதம் பேர் இடம்பெறுவர்.

ஆந்திராவில் தற்போதுள்ள 25 மக்களவை தொகுதிகள் உள்ள நிலையில், தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு 38ஆக அதிகரிக்கும். தெலங்கானாவில் தற்போதுள்ள 17 மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு 26-ஆக அதிகரிக்கும்.

கர்நாடகாவில் தற்போது மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 28-ஆக உள்ள நிலையில் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு 42-ஆக அதிகரிக்கும். கேரளாவில் தற்போதுள்ள 20 மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை, தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு 30-ஆக அதிகரிக்கும்.

மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களில் தென்மாநிலங்களுக்கு 129 இடங்கள் உள்ளன. இது தோராயமாக 23.76 சதவீதமாகும். தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு தென்மாநிலங்கான இடங்கள் 195-ஆக உயரும். அதாவது 23.97 சதவீதமாக அதிகரிக்கும் என்று அமித் ஷா தெரிவித்தார்.

தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்த கருத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்துப் பேசினார்.

அப்போது, "தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தில் நாங்கள் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஏற்கெனவே நீங்கள் கொண்டு வந்த தொகுதி மறுசீரமைப்பு ஆணைய சட்டத்தை அப்படியே நகலெடுத்துள்ளோம். நீங்கள் ஏதாவது மாற்றம் செய்திருந்தால், நாங்கள் அதை செய்ய மாட்டோம்" என்று அமித் ஷா தெரிவித்தார்.