தமிழகத்தில் பரபரப்பு : யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு: இளைஞர்கள் கைது..!

 
1

யூடியூப்பை பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 

தூத்துக்குடி லெவஞ்சிபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் (22), அமுதா நகரைச் சேர்ந்த பிரகாஷ் (23), சுடலை காலனியைச் சேர்ந்தவர் குரு (21). நண்பர்களான இவர்கள் மூன்று பேரும் இரு தினங்களுக்கு முன்பு அலெக்சின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர்.

அதன் பின்னர், அந்த நாட்டு வெடிகுண்டுகளை திறந்த வெளியில் வெடிக்கச் செய்து, அதை வீடியோ எடுத்துள்ளனர். பின்னர், அலெக்ஸின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்ததோடு, இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிவபிரகாஷ், இந்த வீடியோ குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தென்பாகம் காவல் துறைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் விசாரணை நடத்திய தென்பாகம் போலீசார், நாட்டு வெடிகுண்டுகளை வெடித்த அலெக்ஸ், பிரகாஷ், குரு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து, வெடிக்க செய்து பயிற்சி எடுத்ததாகவும், தங்கள் பகுதியில் சிலரிடம் கெத்து காட்டுவதற்காக இதை செய்ததாகவும் கைதான மூன்று பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதையடுத்து மூன்று பேரின் வீடுகளிலும் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிய போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் மூன்று பேரின் வீடுகளிலும் நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்படவில்லை.

மேலும், கைதான மூன்று பேரும் கோஷ்டி மோதலில் ஈடுபடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து வெடிக்க செய்தார்களா? வேறு ஏதேனும் சதிச் செயலில் ஈடுபட திட்டம் தீட்டினார்களா? என்பது குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.