பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்..!!

 
Q Q
பாட்னாவில் உள்ள தலைமைச் செயலகத்தில் கடந்த 15-ந்தேதி அரசு விழா ஒன்று நடந்தது. இதில் 1,283 ஆயுஷ் டாக்டர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் நிதிஷ் குமார் வழங்கினார். விழாவில் பீகார் துணை முதல்-மந்திரிகள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா உள்ளிட்ட மந்திரிகள், அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
நிகழ்ச்சியில் பணி நியமன ஆணையை பெறுவதற்காக, இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்தவாறு மேடையேறி வந்தார். அவரை பார்த்த நிதிஷ் குமார், முதலில் ஹிஜாப்பை விலக்குமாறு சைகை காட்டினார். ஆனால் பெண் டாக்டர் முதல்-மந்திரியை கண்டுக்கொள்ளாமல் இருந்தார். தொடர்ந்து பணி ஆணையை பெற நிதிஷ் குமாரை அந்த டாக்டர் நெருங்கினார். அப்போது அவருடைய அனுமதியின்றி நிதிஷ் குமாரே ஹிஜாப்பை விலக்கினார். இதனை சற்றும் எதிர்பாராமல் அந்த பெண் தடுமாறினார். இதனை மேடையில் இருந்தவர்கள் நகைப்புடன் ரசித்தனர்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி காட்டுத்தீயாக பரவுகிற நிலையில், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நிதிஷ் குமாரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணைப்பொதுச்செயலாளர் ஏ.கே.அப்துர் ரஹீம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை பிடித்து இழுத்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
பெண்களின் மரியாதைக்கும், மத நம்பிக்கைக்கும் எதிரான இத்தகைய அநாகரிகச் செயல், ஒரு முதல்-மந்திரியிடமிருந்து வெளிப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இச்சம்பவத்தை கடுமையாக கண்டிப்பதுடன், பெண்களின் மரியாதையும் மத உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இதற்காக நிதிஷ்குமார் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.