பீகாருக்கு ஏற்பட்ட நிலைமை தமிழகத்துக்கு ஏற்பட கூடாது : முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

 
1 1

சென்னையில் நடைபெற்ற தி.மு.க. எம்.பி. என்.ஆர். இளங்கோவின் மகள் இராகவி - சச்சிந்தர் திருமணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தினார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், "இன்றைக்கு நாடு என்ன மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பீகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு வாக்காளர் திருத்தம் - என்ன மாதிரியான பிரச்சினைகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நான் அதிகம் இங்கு விளக்கி சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

அதற்காகதான், ராகுல் காந்தி ஒரு நடைபயணத்தை மேற்கொண்டிருக்கிறார். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு, நானும் பீகார் சென்று, வாக்காளர் உரிமைப் பயணம் என்று ராகுல் காந்தி நடத்தி வரும் அந்த விழிப்புணர்வு பயணத்தில் நான் பங்கேற்றேன் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.

இந்த நிலை தமிழ்நாட்டில் ஏற்படக் கூடாது என்பதற்காக, இப்போதே நம்முடைய விழிப்புணர்வைப்பெற்று நாம் அதற்காக தயாராக வேண்டும் என்பதற்காகதான் அதை தடுத்து நிறுத்துவதற்கான அத்தனை முயற்சிகளிலும் ஈடுபட்டிருப்பவர்தான் நம்முடைய என்.ஆர்.இளங்கோ. அதற்காக இந்த நேரத்தில் நான் தலைமைக் கழகத்தின் சார்பில் மனதார அவரை பாராட்ட, வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறேன்.

நம்முடைய உரிமை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பான கருத்தரங்குகளை நடத்தி, அதில் நீதியரசர்களை பங்கேற்க வைத்து பல ஆன்றோர்கள், சான்றோர்களையெல்லாம் அதில் பங்கேற்க வைத்து அதையும் நடத்திக் கொண்டு இருக்கிறார் என தெரிவித்தார்.