தமிழக அரசியலில் பரபரப்பு : அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து மனு தாக்கல்..!

 
1

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் நல்லசிவம் என்பவரை சுமார் 16,620 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அதிமுக சார்பில் போட்டியிட்ட பிரபு 56,232 வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையனின் சட்டமன்றத் தேர்தல் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், வேட்புமனுவில், சொத்து, குற்ற வழக்கு விவரங்கள் தெரிவிக்கும் பிரமாணப் பத்திரத்தில் தகவல்களைச் சான்றளித்து கையெழுத்திட்டுள்ள நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகி விட்டது. அதனால் அந்த வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்றது முறையற்றது என்பதால், செங்கோட்டையன் வெற்றி பெற்றதைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனை சுமார் 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் வெற்றி பெற்றிருந்தார். திமுக சார்பில் போட்டியிட்ட பாரிவள்ளல் 55,565 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த நிலையில், லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பாரிவள்ளல் சார்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், ஏழு நிறுவனங்களில் தனக்குள்ள பங்குகள் குறித்த விவரங்களை அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மறைத்துள்ளதாகவும், அதிமுக துண்டு அணிந்துக் கொண்டு, தேவாலயங்களில் பிரச்சாரம் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, புதுக்கோட்டை தொகுதியில் 1,867 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ முத்துராஜாவின் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் ஷெரீப், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை எதிர்த்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிக அளவில் மனுக்கள் தாக்கல் செய்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.