தமிழக அரசியலில் பரபரப்பு : கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : மீண்டும் விசாரணை தொடங்கியது..!
2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் விஜய் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கரமான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 'கரூர் துயரம்' என்று அழைக்கப்படும் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், தற்போது சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கின் கோப்புகளை மீண்டும் கையில் எடுத்து, தங்களது விசாரணையை முறைப்படி தொடங்கியுள்ளனர். கரூர் தாந்தோன்றிமலை அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிபிஐ அலுவலகத்தில் வைத்து இந்த முதற்கட்ட விசாரணைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
விசாரணை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இந்த துயரச் சம்பவம் நடந்த சமயத்தில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு சிபிஐ அதிகாரிகள் குறிவைத்துள்ளனர். சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சையது அலி உட்பட 10 காவலர்களுக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிபிஐ தரப்பில் முறைப்படி சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் சையது அலி மற்றும் அவருடன் பணியாற்றிய சில காவலர்கள் கரூர் தாந்தோன்றிமலை தற்காலிக சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளனர்.
இந்த விசாரணையின் அடுத்தடுத்த கட்டங்களில் மேலும் பல முக்கியப் புள்ளிகளுக்கு சம்மன் அனுப்பப்படலாம் என்பதால் அரசியல் மற்றும் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

