தமிழக அரசியலில் பரபரப்பு : அதிமுக அழிந்துவிட்டது; 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வருவார்கள்: புகழேந்தி
கோவை உடையாம்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஜனநாயகன் திரைப்படம் தேர்தலுக்கு முன்பே வெளியாக வேண்டிய படம். அதனை தடை செய்திருந்தனர். தற்போது படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடுகிறது. படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். பல அமைச்சர்கள் கூட உணர்ச்சிவசப்பட்டனர். பட வெளியீட்டை விழாவாகக் கொண்டாட வேண்டும் என புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தார். எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்' படம் வெளியானபோது ஊர்வலமாக சென்று பார்த்த நினைவு தற்போது வந்தது. படம் வெளியானதால் தடை செய்தவர்களுக்கு வயிறு எரிந்திருக்கும்" என்றார்.
அதிமுக குறித்து பேசிய அவர், "அதிமுக முற்றிலும் சிதைந்துவிட்டது. அந்தக் கட்சியில் இருந்து விலகுபவர்களை விஜய் அரவணைத்து வருகிறார். அதிமுகவில் யாரும் நீடிக்கமாட்டார்கள். அக்கட்சியின் 25 எம்.எல்.ஏ.க்களும் தவெகவுக்கு ஆதரவாக உள்ளனர். இதை எடப்பாடி பழனிசாமி ஏற்க தயாராக இல்லை" என்றார்.
பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து பேசிய புகழேந்தி, "பல ஆண்டுகளுக்கு முன்பு அவரது மகன் பிரவீன் தொடர்பான சாலை விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் முறையாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என்றார்.
தொடர்ந்து, "எடப்பாடி பழனிசாமியைச் சுற்றி ஐந்து 'சகுனிகள்' உள்ளனர். கடைசியில் அவருடன் அந்த ஐந்து பேரும், அவரது உதவியாளரும் மட்டுமே இருப்பார்கள். கட்சியை தரைமட்டமாக்கியது அவர்தான். பொள்ளாச்சி ஜெயராமனுக்கு நாவடக்கம் வேண்டும்" என்றும் கூறினார்.
'ஜனநாயகன்' திரைப்பட டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து, "அதற்கான ஆதாரங்களை வழங்கினால் நடவடிக்கை எடுக்க செய்வோம். டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல்" என்றார்.
தவெகவில் இணைந்துள்ளவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, "சட்டப்படி அவர்கள் நிரபராதிகள் என்பதை நிரூபிக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்சி நடவடிக்கை எடுக்கும். கொடநாடு வழக்கை விரைவாக கையில் எடுக்குமாறு முதல்வர் விஜய்யிடம் தனிப்பட்ட முறையில் மனு அளிக்க உள்ளேன்" என்றார்.

