தமிழக முதல்வர் விஜய் பாணியில் 'குட்டி ஸ்டோரி' சொன்ன அமைச்சர் மரிய வில்சன்..!
தமிழகத்தின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று மாலை வெளியிட்டார்.
வெள்ளை அறிக்கை வெளியிடும் போது அமைச்சர் மரிய வில்சன் முதல்வர் விஜய் பாணியில் குட்டி ஸ்டோரி சொல்லி விளக்கினார். அவர் பேசியதாவது, “மாநிலத்தின் கணக்கு புத்தகத்தை உங்கள் முன் திறந்து வைக்கிறேன். இது முழுமையான வெளிப்படை தன்மையுடன் ஆதாரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு பகுப்பாய்வு கட்டமைப்பாகும்.
இதில் இடம்பெறும் ஒவ்வொரு எண்ணிக்கையும் சரிபார்க்கப்பட்ட ஒரு ஆவணங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் பட்ஜெட் ஆவணங்கள், இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் தரவுகள் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள எந்த தகவலையும் எந்த அரசியல் கட்சியும் மறுக்க முடியாது. கொரோனா காலத்திற்கு பிறகு இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஒரு தொடக்க நிலையில் இருந்து பயணத்தை தொடங்கின” என்றார்.
தொடர்ந்து திருக்குறளை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர் மரிய வில்சன் குட்டி ஸ்டோரி ஒன்றையும் சொன்னார். அதாவது, “ஒரு புயலால் 4 அண்டை வீட்டாரின் வீடுகள் வெள்ளத்தில் அடித்து சென்றுவிட்டது என்று நினைத்து பாருங்கள். அப்போது யாருடைய வீடு பெரிது என்பதை பார்த்து மதிப்பிடுவது நியாயமான ஒப்பீடு அல்ல. வெள்ளம் வடிந்த பிறகு யார் தங்களது வீட்டை விரைவாக சீரமைத்து மீட்டெடுத்தார்கள் என்பதை பார்க்க வேண்டும். 4 பேரில் மூவர் அதனை செய்தார்கள். நாம் செய்யவில்லை” என்றார்.

