விடுமுறை விடும் அளவிற்கு தமிழகத்தில் பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்ரமணியன்

 
ma subramanian

 பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவுக்கு தமிழகத்தில் ஹெச்3என்2 பாதிப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.  இதனையடுத்து காய்ச்சல் பாதிப்புகளை கண்காணிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.  அதன்படி தமிழக அரசும்  வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “வரும் 17ம் தேதி சென்னையில் பிரம்மாண்ட மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. தலைமை செயலகத்தில் பணியாற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

விடுமுறை விடும் அளவிற்கு தமிழகத்தில் பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்ரமணியன்

நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம், ஹெச்3என்2 பாதிப்பு உள்ளதா என சோதனை செய்ய சிறப்பு முகாம்கள் தினந்தோறும் நடைபெறுகிறது. ஹெச்3என்2 பாதிப்பு பெரிய அளவில் இல்லை. லேசான காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் வந்து ஓரிரு நாட்களில் குணமடைந்து விடுவதால் பிரச்சினை ஏதும் இல்லை. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

கொரோனாவிற்குப் பிறகு உலகம் முழுவதும் குறைந்த வயதில் மாரடைப்பால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து ஆராய்ச்சி செய்ய தமிழகத்தில் இருக்கக் கூடிய இருதய வல்லுனர்களிடம் அறிவுறுத்தி உள்ளோம்” என்று தெரிவித்தார்.  மேலும், காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு, “அதற்கான அவசியம் தற்போது இல்லை. அந்த அளவு தீவிரம் இல்லை. பெரிய பாதிப்பும் இல்லை. தேவை இல்லாமல் பதற்றத்தை நாமே உருவாக்க வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.