“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு”- கனிமொழி
திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றியது என்று 1.30 கோடி மகளிர் சொல்வார்கள் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் நடைபெற்று வரும் மகளிரணி மாநாட்டில் உரையாற்றிய எம்பி கனிமொழி, “பெண்களின் எதிர்காலத்துக்கான ஆட்சியை மீண்டும் தரவுள்ள முதலமைச்சரின் பின்னால் நாங்கள் உள்ளோம். நாட்டை காப்பாற்றும் கடமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது. பெண்களின் எதிர்காலத்தை பெருமைப்படுத்தக்கூடிய ஆட்சியை முதலமைச்சர் நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கியுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 56 சதவீதம் பெண்களால் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் உயர்கல்விக்கு பெண்கள் செல்லும் விகிதம் 48% ஆக உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உள்ளது. தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் பெண்கள் அதிகம். திமுகவின் போராட்டத்துக்கு பின்பே பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு. பாஜக ஆளும் டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

100 நாள் வேலை திட்டத்தை மாற்றியதை எதிர்த்து குரல் கொடுத்தது திமுகதான். பாசிசத்துக்கு எதிராக முதலில் குரல் கொடுப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அனைவருக்குமான ஆட்சியை ஸ்டாலின் நடத்திவருகிறார். அவர் மக்களையும் சமூக நீதியையும் காப்பாற்றக்கூடிய ஒரே முதலமைச்சர். திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றியது என்று 1.30 கோடி மகளிர் சொல்வார்கள். உங்களிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைத்திருக்கிறோம் என்பதற்காக அரசமைப்பு புத்தகம் பரிசளித்தோம். தமிழ்நாட்டை மட்டுமின்றி, இந்த நாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பு முதல்வருக்கு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.30 கோடி சகோதரிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை தரப்படுகிறது” என்றார்.


