தமிழ்நாட்டில் 128 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி..!

 
rss

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 128 இடங்களில் அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 01- ஆம் தேதி பேரணி நடத்திவதற்கு அனுமதிக் கேட்டு காவல்துறைக்கு அளித்த மனு பரிசீலிக்கப்படாததால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநிலச் செயலாளர் ஜெகதீஷன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (அக்.16) மீண்டும் உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "சென்னையில் 400 பேரும், மற்ற மாவட்டங்களில் தலா 100 பேரும் கலந்துக் கொள்ளும் வகையில் அனுமதிக் கேட்டு மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்திருந்தது" என வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், "நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் 93 இடங்களில் கலந்துக் கொள்வதற்கான மனு மட்டுமே இதுவரை அளிக்கப்பட்டுள்ளது. அதில், "16 இடங்களில் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் எனவும், 38 இடங்களில் எவ்வளவு வாகனங்கள் பயன்படுத்தப்படும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில், அனுமதி கேட்டு இன்னும் மனு அளிக்கவில்லை. அனுமதிக் கேட்டு கொடுக்கப்பட்ட சில இடங்கள் போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருப்பதால் அனுமதி வழங்குவதில் சிக்கல் உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பேரணிக்கு அனுமதி மறுப்பதன் மூலமாக ஆர்எஸ்எஸ்- க்கு அரசே மறைமுகமாக விளம்பரம் தருகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணி மற்றும் கூட்டத்துக்கு அக்.25 மற்றும் நவ.01- ஆம் தேதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

மேலும், பேரணியின் போது என்ன செய்யலாம்? செய்யக் கூடாது என ஏற்கனவே 2025- ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளை மீறி ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்பட்டால் காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து, தமிழ்நாட்டில் 128 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.