வெளியான அதிர்ச்சி தகவல் : தமிழக அரசின் அலட்சியமே 22 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம்..!
ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்து குடித்து 20 குழந்தைகள் உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரக திசுக்களில் டை எத்திலீன் கிளைக்கால் எனப்படும் வேதிப்பொருள் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கோல்ட்ரிஃப் இருமல் மருந்தே குழந்தைகளின் இறப்புக்கு காரணம் என்றும், அந்த மருந்தில்தான் நச்சுத் தன்மையுள்ள ரசாயனம் கலந்திருப்பதும் தெரியவந்தது.
இச்சம்பவத்தின் எதிரொலியாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து இருமல் மருந்து உற்பத்தி நிறுவனங்களிலும் பரிசோதனை நடத்தவும், ஆய்வு செய்யவும், மருந்துகளை பரிசோதிக்கவும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) முடிவு செய்திருக்கிறது.
2011ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (TNFDA) ஸ்ரீசென் பார்மா நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியுள்ளது. இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட மருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, CDSCO அங்கு ஆய்வு நடத்தியது. அதன்படி, மிக மோசமான கட்டமைப்புடனும், தேசிய மருந்து பாதுகாப்பு விதிமுறைகள் மீறியும் கடந்த 10 ஆண்டுகளாக இந்நிறுவனம் செயல்பட்டு வந்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும் இப்படி ஒரு நிறுவனம் இயங்கி வருவதையே மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் CDSCOக்கு தெரிவிக்கவில்லை என்றும், அதனால் இதுவரை அங்கு தணிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளது. மேலும், இந்நிறுவனம் குறித்த விவரம் எதுவும் CDSCOவின் தரவுதளத்தில் (databases) இல்லை எனவும் விளக்கமளித்துள்ளது.
ஸ்ரீசன் நிறுவனத்தின் தயாரிப்புகள் தங்களுடைய தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படாததால், மாநில அரசின் விதிகளை பின்பற்றுவதை கண்காணிப்பது மாநில ஒழுங்குமுறை ஆணையத்தின் பொறுப்பு எனவும் CDSCO தெரிவித்துள்ளது.
குழந்தைகள் உயிரிழப்பு விவகாரத்திற்கு பிறகு, மத்திய பிரதேசத்தின் அறிவுறுத்தலின்பேரில் அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் TNFDA ஆய்வு மேற்கொண்டபோதிலும் அதுகுறித்த விவரங்களை தங்களுடன் பகிரவில்லை. அக்டோபர் 3ஆம் தேதி பகுப்பாய்வு முடிவுகளை TNFDA வெளிப்படையாக வெளியிட்டது. அப்போதுதான் அந்நிறுவனமானது மருந்து தயாரிப்புக்கு அனுமதிக்கப்பட்ட 0.1 சதவீதத்திற்கு பதிலாக 48% டை எத்திலீன் கிளைக்கால் பயன்படுத்தி இருப்பது தங்களுக்கு தெரிய வந்ததாகவும் CDSCO குற்றஞ்சாட்டியிருக்கிறது.
இருப்பினும், ஸ்ரீசன் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து, அதற்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு CDSCO பரிசீலித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்திருக்கிறது.
இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்ததற்கு தமிழ்நாடு உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் அலட்சியபோக்கே காரணம் என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) குற்றம்சாட்டியுள்ளது.


