தமிழ்நாட்டில் மேலும் 6 அரசு செவிலியர் கல்லூரிகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!
சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசு செவிலிய மாணவ மாணவியர்களுக்கான பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு செவிலிய மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
செவிலியர்களுக்கான பட்டமளிப்பு விழா என்பது கடந்த ஆண்டு முதலே துவங்கப்பட்டுள்ளது. இன்று டிப்ளமோ நர்சிங் 945, பிஎஸ்சி நர்சிங் 75, எம் எஸ் சி நர்சிங் 64, நர்ஸ் ப்ராக்டிஸ்னர் 16, என 1100 மாணவ மாணவியர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வு துறையில் செவிலியர்களின் பங்கு அளப்பரியது. மகப்பேறு துறையில் குழந்தைகளின் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருவதற்க்கு செவிலியர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணியே காரணம்.
திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முன்பாக ஒரு லட்சம் மகப்பேறுவில் மகளிருக்கான இறப்பு என்பது 90 ஆக இருந்தது. ஆனால் தற்போது அது 39.5 ஆக குறைந்துள்ளது. குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000-க்கு 7.7ஆக குறைந்துள்ளது. இதற்கு காரணம் செவிலியர்களின் சேவை உணர்வு. ஒவ்வொரு செவிலியர்களையும் அன்னை தெரசாவுக்கு இணையாக மதிப்பீடு செய்யும் மாநிலம் தான் தமிழ்நாடு.
தமிழ்நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு 27,370 செவிலியர்கள் படித்து வெளியேறுகிறார்கள். இந்தியாவில் உள்ள 38 மாநிலங்களில் தமிழ்நாட்டில் தான் அதிக அளவிலான செவிலியர்கள் பயிற்சி முடித்து பணிக்கு திரும்புகிறார்கள். மதுரை செவிலியர் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை 59 லிருந்து 100 ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவ பல்கலைக்கழகங்களில் நிதியிலிருந்து சென்னையில் 6 எக்கர் பரப்பளவில் 417 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான மருத்துவமனையுடன் கூடிய ஆராய்ச்சி மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 6 செவிலியர் கல்லூரிகள் செயல்பாட்டில் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் கூடுதல் செவிலியர் கல்லூரிகளை அரசின் சார்பில் துவங்க திட்டமிடப்பட்டு திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் புதிய செவிலியர் கல்லூரிகள் மிக விரைவில் தொடங்கப்படும். இதில் மேலை நாடுகளுடன் போட்டி போடும் வகையிலான அடிப்படை வசதிகளுடன் கல்வி தரம் இருக்கும்.
செவிலியர்களுக்கான காலி பணியிடங்கள் ஏற்படும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னுரிமை தந்து காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. கரோனா காலத்தில் பணியாற்றிய 719 செவிலியர்களுக்கு வரும் 13 ஆம் தேதி பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
இதன் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில், ''8,800 செவிலியர்களுக்கு இதுவரை தமிழ்நாடு அரசு சார்பில் பணியாணைகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா காலத்தில் பணியாற்றிய 719 செவிலியர்களுக்கு வரும் 13 ஆம் தேதி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன செவிலியர்களின் போராட்டத்தை ஒட்டி புதிதாக 1000 காலி பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கான பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.


