100 நாள் வேலை திட்டத்திற்கு பதிலாக புதிய திட்டம் அமல் – தமிழக அரசு அரசாணை!
Jul 1, 2026, 10:44 IST1782882872127
கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இந்த திட்டத்திற்கு மாற்றாக, அதில் சில மாறுதல்களுடன் வளர்ச்சியடைந்த பாரதம் - கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம் (Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) – VB-G RAM G) என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
தமிழ்நாட்டில் இந்த திட்டம் 2026 ஜூலை 1 முதல் தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. அதில்,
- விருப்பத்துடன் திறன்சாரா உடல் உழைப்புப் பணியை மேற்கொள்ள முன்வரும் கிராமப்புற குடும்பங்களின் வயது வந்த உறுப்பினர்களுக்கு, ஒவ்வொரு நிதியாண்டிலும் 125 நாட்கள் சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு உத்தரவாதம் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.
- இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் நீர்வளப் பாதுகாப்பு, கிராமப்புற அடிப்படை உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம் தொடர்பான உள்கட்டமைப்பு, தீவிர வானிலை மற்றும் பேரிடர் பாதிப்புகளைத் தணிக்கும் சிறப்புப் பணிகள் ஆகிய நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- பதிவு செய்யப்பட்ட குடும்பத்தின் வயது வந்த உறுப்பினர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ, தனிநபராகவோ அல்லது குழுவாகவோ அளிக்கலாம்.
- விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து அல்லது முன்கூட்டியே வேலை கோரியிருந்தால் கோரிய தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்பட வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்படாவிட்டால், விண்ணப்பதாரருக்கு வேலைஇல்லா உதவித்தொகை வழங்கப்படும்.
- முதல் 30 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட கூலியில் குறைந்தது நான்கில் ஒரு பங்கும், அதன்பிறகு நிதியாண்டின் மீதமுள்ள காலத்திற்கு அறிவிக்கப்பட்ட கூலியில் குறைந்தது பாதியும் வழங்கப்படும்.
- வேலை செய்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி வாரந்தோறும் அல்லது அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.
- மஸ்டர் ரோல் (வருகை பதிவு) முடிவடைந்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் கூலி வழங்கப்படாவிட்டால், 16வது நாளிலிருந்து நிலுவைத்தொகைக்கு நாளொன்றுக்கு 0.05 சதவீதம் இழப்பீடு வழங்கப்படும்.
- வேலை ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். பதிவு செய்து வேலை கோரியவர்களில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் பயனாளிகளாக இருக்க வேண்டும்.
- வேலை, முடிந்தவரை விண்ணப்பதாரர் வசிக்கும் கிராமத்திலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வழங்கப்பட வேண்டும். அதற்கு வெளியே வேலை வழங்கப்பட்டால், போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரச் செலவுகளுக்காக கூலியுடன் கூடுதலாக 10 சதவீதம் வழங்கப்படும்.
- தனித்து வாழும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், 60 வயதுக்கு மேற்பட்டோர், விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் மற்றும் திருநங்கைகளுக்கு சிறப்பு கிராமப்புற வேலை உறுதி அட்டை வழங்கப்படும்.
- திட்டத்தின் கீழ் பணியிடங்களில் தினசரி வருகை பதிவு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். அனைத்து பணிகளும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டு, ஜியோ-டேக்கிங், மேலாண்மை தகவல் அமைப்பு (MIS), சமூகத் தணிக்கை உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
- கிராம சபை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளையும் கண்காணித்து, சமூக தணிக்கை நடத்த வேண்டும். பணிகள் தொடர்பான பதிவேடுகள், மஸ்டர் ரோல், அளவீட்டு பதிவுகள், செலவின ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பொதுமக்கள் பார்வைக்குக் கிடைக்கச் செய்யப்பட வேண்டும்.
- ஊராட்சி, ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் புகார் தீர்வு அமைப்பு செயல்படுத்தப்படும். பெறப்படும் புகார்கள் ஏழு வேலை நாட்களுக்குள் விசாரிக்கப்பட்டு, 15 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
- சமூகத் தணிக்கையின்போது அல்லது விசாரணையில் நிதி முறைகேட்டுக்கான ஆரம்பகட்ட ஆதாரம் கண்டறியப்பட்டால், மாவட்ட ஆட்சியர் சட்ட ஆலோசனை பெற்று முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விதைப்பு மற்றும் அறுவடை உள்ளிட்ட உச்ச விவசாயப் பருவங்களில், நிதியாண்டில் மொத்தம் 60 நாட்களுக்கு மிகாமல் புதிய பணிகள் மேற்கொள்ளப்படாது. இதற்கான காலத்தை தமிழக அரசு அறிவிக்கும்.
- இந்தத் திட்டம் மத்திய நிதியுதவி திட்டமாக செயல்படுத்தப்படும். மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் என்ற விகிதத்தில் திட்டத்திற்கான நிதி வழங்கப்படும்.
- வேலையில்லா உதவித்தொகை மற்றும் கூலி தாமத இழப்பீட்டிற்கான செலவை தமிழக அரசே ஏற்கும்...என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

