பெண்கள் பெயரில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் தரும் தமிழக அரசு!

 
1 1

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்கள், விவசாயம் செய்வதற்காக புதிய நிலம் வாங்க மானியத்துடன் கூடிய கடன் உதவியும் வழங்கப்படுகிறது. இதன் மூலம், பெண்களை விவசாய துறையில் சாதனையாளர்களாக உயர்த்தி, அவர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதை அரசு நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திட்டம், பயனாளிகளுக்கு பல வழிகளில் உதவுகிறது.

நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய பெண்கள், புதிதாக விவசாய நிலம் வாங்குவதற்காக, அந்த நிலத்தின் சந்தை மதிப்பில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியமாக தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மீதி தொகைக்கு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடன் உதவியும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. இந்த திட்டத்தின் மற்றொரு மிகப்பெரிய சிறப்பு, வாங்கப்படும் நிலத்திற்கான முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணத்திலிருந்து 100% முழுமையான விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, பயனாளிகள் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல், தங்களது பெயரில் நிலத்தை பதிவு செய்துகொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம், ஒவ்வொரு பயனாளியும் அதிகபட்சமாக இரண்டரை ஏக்கர் நன்செய் நிலம் அல்லது ஐந்து ஏக்கர் புன்செய் நிலம் வரை வாங்கிக்கொள்ள முடியும்.

தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள், பின்வரும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 55க்குள் இருக்க வேண்டும். அவர்களின் தொழில் விவசாயம் செய்பவராகவோ அல்லது விவசாய கூலியாகவோ இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர், இதுவரை தாட்கோ திட்டத்தின் கீழ் மானியம் பெற்றிருக்க கூடாது. அதே போல விண்ணப்பிப்பவருக்கு சொந்தமாக எந்த விவசாய நிலமும் இருக்க கூடாது. இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலத்தை, 10 ஆண்டுகளுக்கு வேறு யாருக்கும் விற்க கூடாது. வாங்கப்படும் நிலம், SC/ST பிரிவை சாராத நில உரிமையாளர்களிடமிருந்து வாங்கப்பட வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியுள்ள பெண்கள் இந்த திட்டத்தில் இரண்டு வழிகளில் விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி, விண்ணப்ப படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். அப்படி இல்லை என்றால் newscheme.tahdco.com என்ற தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வருமான சான்றிதழ், வங்கி கணக்கு விவரம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தேவைப்படும்.