அரசியல் கட்சிகளுக்கான SOP ரெடி : வரைவு அறிக்கையைச் சமர்ப்பித்தது தமிழ்நாடு அரசு..!

 
1

கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த அக்டோபர் 27 அன்று, அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை 10 நாள்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த நவம்பர் 6 அன்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளையும் கூட்டி தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டது. அதில், பொதுக்கூட்டங்கள் நடத்த அரசியல் கட்சிகளுக்கு வைப்புத் தொகை நிர்ணயிப்பது உள்ளிட்ட பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நவம்பர் 20-க்குள் வரைவு வழிகாட்டு விதிமுறைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூடுதல் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

இன்றைய விசாரணையின் போது, பல அரசியல் கட்சிகள் தங்களுக்கு வரைவு SOPயின் நகல் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டின. ஏன் வரைவு SOPயை கட்சிகளுடன் பகிரவில்லை என்று நீதிமன்றம் அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த தமிழக அரசு, எந்தவொரு கட்சிக்கும் வரைவு SOPயை அனுப்பவில்லை என்றும், அப்படி அனுப்பியிருந்தால் ஒவ்வொரு நிபந்தனைக்கும் ஆட்சேபனைகள் தெரிவித்து, SOPயை இறுதி செய்வது முடிவில்லாத பணியாகிவிடும் என்றும் கூறியது.

மாநிலத்தில் சுமார் 20 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 42 பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் உள்ளன என்றும், இந்த விதிமுறைகளால் பாதிக்கப்பட்ட எந்தவொரு கட்சியும் இறுதி SOP வெளியிடப்பட்ட பிறகு அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்றும் அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. தற்போது உயர் நீதிமன்றம் ஆய்வு செய்யவுள்ள இந்த வரைவு SOP, இறுதி செய்யப்பட்ட பிறகு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பேரணிகள் மற்றும் கூட்டங்களில் பின்பற்ற வேண்டும்.

இந்த வரைவு SOPயின் முக்கிய நோக்கம், பொதுக்கூட்டங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களைத் தடுப்பதாகும். குறிப்பாக, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்தல், அவசர காலங்களில் செயல்படும் வழிமுறைகள் போன்றவற்றை இது உள்ளடக்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டங்களை நடத்துவதற்கு முன் இந்த SOPயில் உள்ள விதிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்படும். இதன் மூலம், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு முயல்கிறது.