"திட்டமிட்டே அவப்பெயர் ஏற்படுத்துகிறார்!" – மாணவர் பாரதிதாசன் வீடியோவுக்குத் தமிழ்நாடு அரசு பதில்!

 
1

பாரதிதாசன் என்ற மாணவருக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் இரண்டாம் ஆண்டு படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று கடந்த ஒரு மாத காலமாக புகார் தெரிவித்துவருகிறார். இந்த விவகாரம் குறித்து தவெக அரசில் சமூக நீதித்துறை அமைச்சராக இருக்கும் வன்னி அரசு சட்டமன்றத்தில் விளக்கம் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் தவெக அரசு மீது தீவிர விமர்சனத்தை முன்வைத்த நிலையில், மாணவர் பாரதிதாசன் மீண்டும் இன்று தன்னால் படிப்பை தொடர இயலாத சூழல் உள்ளதாக கூறி கவலையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை சுட்டிக் காட்டி முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவெக அரசை விமர்சித்துள்ளனர்.

மாணவர் பாரதிதாசன் விவகாரம் குறித்து அரசு விளக்கம்

இந்நிலையில், மாணவர் பாரதிதாசன் வெளியிட்ட காணொளி தொடர்பான விளக்க அறிக்கையை தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு; வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி/ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிருத்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு தமிழக அரசு சமூக நீதி துறையால் அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் ஒரு மாணவருக்கு கல்வி நிறுவனத்திற்கு செலுத்தும் கட்டணம் மற்றும் அவர் வெளிநாட்டில் வாழ்க்கை செலவினம் மற்றும் இதர செலவினங்கள் (Living & other Expenses) ஆகியவை சேர்த்து அதிகபட்சமாக ஆண்டிற்கு ரூ.36.00 லட்சம் வரை (upto Rs. 36 lakhs) வழங்கப்படுகிறது. மாணவர் திரு பாரதிதாசன் என்பவர் மலேசிய நாட்டில் உள்ள National University of Malasiya (Universiti Kebangsaan Malaysia) இல் Ph.D (Tissue Engineering and Regenerative Medicine) படிப்பதற்காக அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் 2025-2026 ஆம் ஆண்டு முதல் மொத்தம் மூன்றாண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை ஆண்டிற்கு ரூ. 36.00 இலட்சம் வரை வழங்கிட ஒப்புதல் அளித்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரால் பரிந்துரை கடிதம் (Sponsorship letter) 2025 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் முதலாம் கல்வி ஆண்டான 2025-2026 இல் அம்மாணவரின் Ph.D படிப்புக்கு மொத்தம் ரூ.36.00 லட்சம் கல்வி உதவித்தொகையாக கீழ்க்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது.

  • கல்விக்கட்டணம் ரூ.5,01,638
  • விசா/விமானக்கட்டணம் ரூ.358222
  • வாழ்க்கை செலவினங்கள் ரூ.846893
  • ஆராய்ச்சி செலவினம் ரூ.18,93,247
  • மொத்தம் ரூ.36,00,000

இதில் கல்விக்கட்டணம் ரூ.5,01,638/-பல்கலைக்கழகத்தின் வங்கிக்கணக்கிற்கும், மீதமுள்ள தொகை ரூ.30,98,362/- மாணவரது வங்கிக் கணக்கிற்கும் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. அத்தொகையில் விசா/விமானக் கட்டணம் தவிர மாணவரது ஆராய்ச்சி மற்றும் வாழ்க்கை செலவினங்களுக்காக பெற்ற தொகை ரூ.27,40,140/- க்கான செலவுப்பட்டியல் (Voucher) சமர்ப்பிக்குமாறு மாணவரிடம் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் மாணவர் உரிய ஆவணங்களை சரிவர சமர்ப்பிக்காமல் இரண்டாம் ஆண்டிற்கான (2026-2027) கல்வி உதவித்தொகையினை முழுமையாக வழங்கிட கோரிவந்த நிலையில், மாணவரின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, அவர் பல்கலைக்கழகத்திற்கு செலுத்தவேண்டிய முழு கல்விக்கட்டணம் ரூ.5.57 லட்சம் பல்கலைக்கழகத்தின் வங்கிக்கணக்கிற்கும் மற்றும் மாணவருக்கு வாழ்க்கை செலவினமாக ரூ.6.65 லட்சம் மாணவரது வங்கிக்கணக்கிற்கும் ஆக மொத்தம் ரூ.12.00 லட்சம் (RM 23460 + RM 27600 = RM 51060) இரண்டாம் கல்வியாண்டிற்காக 2026 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மாணவர் இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சி செலவினங்களுக்காக ரூ.19.50 இலட்சம் (RM 83300) விடுவிக்குமாறு கோரியுள்ளார். அதில் மாணவர் சமர்ப்பித்துள்ள உத்தேச செலவினபட்டியல்கள் சம்மந்தப்பட்ட பல்கலைக்கழக பதிவாளரால் பரிந்துரை செய்யப்படவில்லை.

இந்நிலையில் மாணவர் முதலாமாண்டு படிப்பிற்கான ஆராய்ச்சி மற்றும் வாழ்க்கை செலவினங்களுக்காக சமர்பித்த ஆவணங்களில், ரூ.8,17,962/-க்கான பட்டியல்கள் ஏற்புடையதாக இல்லை என்பது குறித்தும், மாணவரால் ஆராய்ச்சி செலவினங்களுக்காக வாங்கப்பட்ட பொருட்கள் (Research Materials) மற்றும் அதற்கான தொகை செலுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் (Proof of Payment) ஆகியவை தொடர்பாக 20.08.2026 அன்று ஏற்கனவே மாணவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் இதுவரையில் சரியான விளக்கம் மாணவரால் அளிக்கபடவில்லை.

மேலும் மாணவர் பயிலும் National University of Malasiya (Universiti Kebangsaan Malaysia) பல்கலைக்கழக பதிவாளருக்கு மாணவர் திரு.பாரதிதாசன் என்பவரது இரண்டாம் ஆண்டு கல்விக்கான ஆராய்ச்சி செலவின கோரிக்கை ரூ.19.50 இலட்சம் (RM 83300) தொடர்பாக, மாணவர் தெரிவித்துள்ள ஆராய்ச்சி பொருட்கள் மற்றும் அதற்கான செலவினங்கள் அம்மாணவரின் ஆராய்ச்சிக்குத்தான்

தேவைப்படுகிறது என்பதை பல்கலைக்கழகம் பரிந்துரைத்து அனுப்புமாறு தெரிவித்து இன்று (17.09.2026; 13:01 Hrs) ஆதிதிராவிடர் நலத்துறையிலிருந்து மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டு, அதன் நகல் மாணவருக்கும் அனுப்பப்பட்டது. பல்கலைக்கழகத்திலிருந்து பதில் கிடைக்கப்பெற்றவுடன் கல்விஉதவித்தொகை விடுவிக்கப்படும் என்ற விவரமும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மேற்படி மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றவுடன், மாணவர் எக்ஸ் தளத்தில் காணொளி ஒன்றை பதிவுசெய்து உண்மைக்கு மாறான தகவல்களை பதிவு செய்துள்ளார். மாணவருக்கு இதுவரையில் முதலாமாண்டு படிப்பிற்கு ரூ.36 இலட்சம் மற்றும் இரண்டாமாண்டிற்கு ரூ.12.00 இலட்சம் ஆக மொத்தம் ரூ.48.00 இலட்சம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாணவரது காணொளியில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவும், அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் உள்ளது.

2025-26 ஆம் ஆண்டு சமூக நீதி துறையால் கல்வித்உதவித் தொகை பெற்று தற்போது பல்வேறு வெளிநாடுகளில் பயின்று வரும் 181 மாணக்கர்களில் பாரதிதாசன் என்பவரை தவிர வேறு எந்தவொரு மாணவரிடமிருந்தும் கல்விஉதவித்தொகை உரிய நேரத்தில் வழங்கப்படுவது தொடர்பாக எவ்வித புகார்களும் பெறப்படவில்லை என்பதுடன் அனைத்து மாணவர்களுக்கும் உரிய ஆவணங்களின் அடிப்படையில் சரியான நேரத்தில் சமூக நீதி துறையால் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு 2026-27 ஆம் ஆண்டில் சமூக நீதி துறையால் இதுவரை கல்வி உதவித்தொகை பெற்ற மொத்த மாணவர்களைவிட இருமடங்காக 365 மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான கல்வித் உதவித்தொகை ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்திற்கு சமூக நீதி துறையால் இதுவரை இல்லாத அளவாக ரூ. 131 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நடப்பாண்டு சமூக நீதி துறையால் 2026-27 ஆம் ஆண்டு முதல் சுயநிதி கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ. 4750/- லிருந்து ரூ. 12,000/- உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நடப்பாண்டு கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் சுமார் 95000 மாணாக்கர்கள் பயன்பெறுகின்றனர். இதற்காக ரூ.65.00 கோடி கூடுதல் செலவினம் சமூக நீதி துறையால் மேற்கொள்ளப்பட உள்ளது.

கல்வி உதவித்தொகை திட்டங்களை பொறுத்தவரை சமூக நீதி துறை இதுவரை இல்லாத அளவில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாணவரது காணொளியானது முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல்களுடன் பல்வேறு மாணவர்கள் பயன்பெற்று வரும் இத்திட்டத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடனும் உள்ளது." இவ்வாறு அரசு தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.