2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள்- தமிழக அரசு வெளியீடு!
பொங்கல் பண்டிகையின் ஓர் அங்கமாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகிறது. இதில் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகியவை உலகப் புகழ்பெற்றவை.இதேபோல் திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளும் புகழ்பெற்று விளங்குகின்றன. எனவே 2026ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளை தயார்படுத்தும் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
2026 ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு மாநில அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவை,
- மாவட்ட ஆட்சியா்களிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்ளிட்டஎந்த போட்டிகளையும் நடத்தக் கூடாது.
- விலங்குகள் வதை தடுப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
- முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமல் எந்த போட்டியும் நடத்த ஒப்புதல் அளிக்க கூடாது.
- காளைகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள கூடாது.
- விலங்குகள்வதை தடுப்பு சட்டத்தின் விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி, காளைகள் மற்றும் கால்நடைகளுக்கு எந்த விதமான தீங்கும் ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற வேண்டும்.
- காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும், பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்வது அவசியம்.
மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்
இதன்மூலம் ஜல்லிக்கட்டு, எருது விடும் விழா, மஞ்சு விரட்டு போன்ற எந்த ஒரு நிகழ்வுகளுக்கும், போட்டிகளுக்கும் உள்ளூர் பிரதிநிதிகளின் அனுமதி மட்டும் போதாது. சம்பந்தப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்று தெரிகிறது.


