இனி தலைமைச் செயலாளர், டிஜிபி நியமனங்களுக்கு ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை - தமிழ்நாடு அரசு அதிரடி..!
தமிழ்நாடு அரசில், அரசுப் பணியாளர் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம், ஒழுங்கு நடவடிக்கை, விடுப்பு, நிதி அதிகாரம் உள்ளிட்ட நிர்வாக நடைமுறைகளை ஒருங்கிணைத்து மனிதவள மேலாண்மைத் துறை புதிய நிலையாணையை வெளியிட்டுள்ளது.
1978-ஆம் ஆண்டைய தமிழ்நாடு அரசு அலுவல் விதிகளின் (Rule 35(4)) அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவு, 2026 ஜூலை 29 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
புதிய நிலையாணையின்படி, துறைத் தலைவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், கூடுதல் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட உயர்நிலைப் பதவிகளுக்கான பதவி உயர்வுப் பட்டியல்கள் முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும்.
மூப்பு வரிசையை மீறி வழங்கப்படும் பதவி உயர்வுகள், தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவின் பரிந்துரைக்குப் பிறகே முதலமைச்சரின் பரிசீலனைக்கு செல்லும்.
அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் (SP), கூடுதல் இயக்குநர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளின் நியமனம் மற்றும் பணியிட மாற்றங்கள் முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை, குற்றச்சாட்டு ஆணை, விசாரணை அதிகாரி நியமனம் உள்ளிட்ட நடவடிக்கைகளும் முதலமைச்சரின் ஒப்புதலுடன் மட்டுமே மேற்கொள்ளப்படும். மற்ற அரசு ஊழியர்களுக்கான ஒழுங்கு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மேற்கொள்வார்கள்.
புதிய சேவை விதிகள், உயர்நிலைப் பணியிடங்கள் உருவாக்கம், பெரிய அளவிலான நிலம் கையகப்படுத்துதல், அதிக நிதி ஒதுக்கீடு, மத்திய அரசு நிதியுதவி திட்டங்களில் மாநில அரசின் பங்களிப்பு உள்ளிட்ட முக்கிய நிர்வாக முடிவுகளுக்கும் புதிய நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
மேலும், குண்டாஸ், தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA), போதைப்பொருள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் நடவடிக்கைகள் தொடர்பான கோப்புகள், சட்டத்துறை அமைச்சர் அல்லது முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையாணையின் முக்கிய அம்சமாக, தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைவர் நியமனக் கோப்புகள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டியதில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

