பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் : தற்போது அதற்கான தேவை எழவில்லை என தமிழக அரசு விளக்கம்..
மாவட்டக் கல்வி அலுவலகங்களில் (தொடக்கக் கல்வி) பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் உருவாக்குவதற்கான தேவை தற்போது இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வரும் செப்.10-ம் தேதி அன்று 31 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் மாவட்ட தலைநகரங்களில் திட்டமிட்டுள்ளது சார்பாக செப்.6ம் தேதி அன்று தொடக்கக் கல்வி இயக்குநர் தலைமையில் டிட்டோஜாக் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஏற்கெனவே, டிட்டோஜாக் சார்பில் 30 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி 13.10.2023 அன்று சென்னையில் பேராசிரியர் அன்பழகனார் ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தில் ஆர்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 12.10.2023 அன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில், பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 12 அம்சக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும், டிட்டோஜாக் அமைப்பு 31 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜூலை 29, 30, 31 ஆகிய தேதிகளில் மூன்று நாள் டிபிஐ வளாக முற்றுகைப் போராட்ட அறிவிப்பினை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறைச் செயலர் மற்றும் இயக்குநர்களுடன் 22.07.2024 மற்றும் 30.07.2024 ஆகிய தேதிகளில் தலைமைச் செயலகத்தில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக செப்.6ம் தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தில் கீழ்க்கண்ட விவரங்கள் டிட்டோஜாக் பிரதிநிதிகளிடம் கோரிக்கையின் தற்போதைய நிலை சார்ந்து தெரிவிக்கப்பட்டது.
> கல்வி மேலாண்மை தகவல் மையம் (EMIS) சார்ந்த பதிவுகள் ஆசிரியர்களை வைத்து மேற்கொள்ள கூடாது என்ற கோரிக்கையை ஏற்று இதற்கென்று தனியாக மாநிலத்திலுள்ள 6000-க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் Administrator cum Instructorகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அருகாமையில் உள்ள தொடக்கப்பள்ளிகளிலும் EMIS சார்ந்த அனைத்துப் பதிவுகளையும் குறிப்பாக மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்டங்களான பாடப்புத்தகம், பாடக்குறிப்பேடு, காலணி, காலேந்திகள், காலுறைகள், சீருடைகள், வண்ண பென்சில்கள், வண்ணத்தீட்டிகள், புவியியல் வரைபடம் ஆங்கிள் பூட், கம்பளிச்சட்டை, ரெயின்கோட், புத்தகப்பை, கணித உபகரணப்பெட்டி மாணவர்களின் வருகைப்பதிவேடு ஆகிய பதிவுகள் இவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
> தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பெரும்பாலான இணைய வழிச் செயல்பாடுகள் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை எளிதாக்குவதற்கு ஏதுவாக 29,344 பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகள் (TAB) வழங்கப்பட்டு கற்றல்-கற்பித்தல் பணிகள் கற்றல் அறிவுத்திறனை சோதிக்க மாதம் ஒரு முறை 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரை வெள்ளிக் கிழமைகளிலும் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு புதன் கிழமைகளிலும் வளர்அறி மதிப்பீட்டுப் பதிவுகள் (Assesment) மேற்கொள்ளப்படுகிறது.
> நடைமுறையில் உள்ள அரசாணையில் மாதமொருமுறை SMC கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது, பள்ளியின் நலனுக்கு தேவையின் அடிப்படையில் மட்டுமே SMC கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
> பயிற்சிகளுக்கு ஆசிரியர்களை கருத்தாளர்களாகப் பயன்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையை ஏற்று வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்களுடன் அனுபவம் மிகுந்த ஒரு சில விருப்பமுள்ள ஆசிரியர்களை மட்டுமே கருத்தாளர்களாக பயன்படுத்தப்பட்டு வருவது தெரிவிக்கப்பட்டது.
> 2016, 2017, 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் மீது மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கைகள் இருவேறு அரசாணைகள் மூலம் போராட்ட காலம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலம் பணிக்காலமாக முறைப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் காவல்துறையில் நிலுவையிலுள்ள முதல் தகவல் அறிக்கையில் (FIR) உள்ள ஆசிரியர்களின் பெயர்களை நீக்கம் செய்ய மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து (தொடக்கக் கல்வி) பெயர்பட்டியல் மற்றும் சார்ந்த ஆசிரியர் சங்க பிரதிநிதிகளால் வழங்கப்படும் பட்டியலை கொண்டு நிலுவையிலுள்ள காவல்துறை முதல் தகவல் அறிக்கை நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
> தேர்வுநிலை, சிறப்புநிலையில் முறையே அப்பணியிடத்தின் முதல் மற்றும் இரண்டாம் நிலை பதவி உயர்வு பணியிடங்களில் சாதாராண நிலை ஊதிய விகிதத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என தெளிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பேச்சுவார்த்தையின் போது தணிக்கைத்துறைக்கு விதிகளின்படி நடவடிக்கைக்கு உட்படுத்திட உரிய அறிவுரைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
> இக்குழு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் 10.03.2023, 14.06.2023 மற்றும் 01.11.2023 ஆகிய நாட்களில் மூன்று சுற்று கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது. ஆசிரியர் கூட்டமைப்பின் எஞ்சியுள்ளவர்களுக்கான கூட்டம் விரைவில் நடத்தப்படும்.
> B.Lit தமிழ் முடித்து நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணிபுரிபவர்களுக்கு பி.எட்., உயர் கல்வி தகுதி தேர்ச்சி பெற்று உயர்கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதியம் பெற்றவர்களுக்கு தணிக்கைத்தடை காரணமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி, நிறுத்தப்பட்ட ஊக்க ஊதியம் சார்பாக கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது.
> உயர்கல்வி பயின்ற 4500 பேருக்கு பின்னேற்பு அனுமதி (பதவி உயர்வுக்கு மட்டும்) வழங்கிடும் கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது.
> அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட, பருவகால ஊதிய உயர்வு இன்றி Entry Pay மட்டும் பெற்று வரும் 1500 ஆசிரியர்களுக்கு நியமனம் முதல், ஆண்டு ஊதிய உயர்வு அனுமதிப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் இறுதி தீர்ப்பாணையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
> பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேவை என்ற தீர்ப்பை எதிர்த்து பணி முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட தமிழ்நாடு அரசினால் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் Advocate on record மூலமாக வழக்கினை விரைந்து பட்டியலிட அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக் கல்வித் துறை அரசு செயலர் / இயக்குநர் நேரடியாகச் சென்று இவ்வழக்கினை மாண்பமை உச்சநீதிமன்றத்தில் கேட்புக்கு விரைந்து கொண்டுவர தனித்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
> 58 மாவட்டக் கல்வி அலுவலகங்களில் (தொடக்கக் கல்வி) பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவிக்க தற்போதைய நிலையில் தேவை எழவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேற்கண்டவாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் தவிர்த்து மற்ற கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவுக்கு (டிட்டோஜாக்) தெரிவிக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.