அதிக கட்டணம்- சவீதா மருத்துவக் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்!
2022-ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து, மாணவர்களின் வருகைப்பதிவு இணையதளத்தை முடக்கிய சவீதா மருத்துவக் கல்லூரியின் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளதாக மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
தேசிய மருத்துவ ஆணையம் 07.04.2026 அன்று வெளியிட்ட பொது அறிவிப்பில், எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கட்டணத்தை, பரிந்துரைக்கப்பட்ட கல்விக் காலமான நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே வசூலிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், தண்டலத்திலுள்ள சவீதா மருத்துவக் கல்லூரியின் 2022-ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ். சேர்ந்து தற்போது இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டிற்கான கல்விக் கட்டணமாக ரூ.24,75,000 கல்லூரி நிர்வாகத்தால் கோரப்படுவதாகவும், அக்கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்களுக்கு வருகைப்பதிவு இணையதளம் (VStudy) முடக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்களும், பெற்றோரும் புகார் அளித்தனர். இப்புகார்களை தமிழ்நாடு அரசு தீவிரமாகக் கருத்தில் கொண்டு, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தால் மூன்று அலுவலர்கள் கொண்ட குழுவை நியமித்தது. இக்குழுவானது புகார்கள் மீது 12.10.2026 அன்று விசாரணை மேற்கொண்டது. இதில் 17 மாணவர்களும், 7 பெற்றோரும் பங்கேற்றனர். விசாரணைக்கு அழைக்கப்பட்ட சவீதா நிர்வாகம் விசாரணையில் கலந்துகொள்ளவில்லை. இவ்விசாரணையில் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிப்பதில் சவீதா மருத்துவக் கல்லூரி தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை என்பதும், மேலும், ஐந்தாம் வருடத்திற்கு வருகைப்பதிவு முழு ஆண்டு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கான இணையதளத்தை 30.09.2026 முதல் முடக்கி உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
சவீதா மருத்துவக் கல்லூரி ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் அங்கம் என்பதால், அதன் கட்டணம் மாநிலக் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் வரம்பிற்கு வெளியே உள்ளது. அது தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒழுங்குமுறைக்கு உட்பட்டது என்பதால் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதற்காகக் கல்லூரி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், ஐந்தாம் ஆண்டுக்கு ஆண்டுக் கட்டணத்தில் பாதி மட்டுமே வசூலிக்க உத்தரவிடுமாறும் தேசிய மருத்துவ ஆணையத்திற்கும், பல்கலைக்கழக மானியக் குழுவிற்கும் தமிழ்நாடு அரசு இன்று (21.10.2026) கடிதம் எழுதி உள்ளது. மேலும் மாணவர்களுக்கான வருகைப்பதிவு இணையதளத்தை மீண்டும் திறக்கவும், கூடுதல் தொகையைச் செலுத்தவில்லை என்பதற்காக எந்த மாணவருக்கும் வருகைப்பதிவு, மருத்துவப் பயிற்சிப் பணி, தேர்வு எழுதும் தகுதி ஆகியவை மறுக்கப்படாமல் இருக்கவும் உத்தரவிடுமாறும் ஆணையத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையைத் திருப்பிச் செலுத்த அல்லது சரிசெய்ய உத்தரவிடுமாறும் கோரியுள்ளது. மேலும், புகார் அளித்ததற்காகவோ விசாரணையில் பங்கேற்றதற்காகவோ எந்த மாணவருக்கோ பெற்றோருக்கோ பாதகமான விளைவு ஏற்படாமல் உறுதி செய்யுமாறும் அரசு வலியுறுத்தியுள்ளது.
கட்டணம் தொடர்பாக எந்தவொரு மாணவரின் படிப்பும் பாதிக்கப்படக் கூடாது என்பதே தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடு. வருகைப்பதிவு இணையதளத்தை உடனடியாகத் திறக்குமாறும், புகார் அளித்த மாணவர்கள் அல்லது பெற்றோர் மீது எந்தப் பாதகமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் கல்லூரி நிர்வாகத்திற்கு அரசின் சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

