சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்- சீமான்
கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் தம்பி வேலாயுதம் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம்; சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம் ஜெயங்கொண்டான் நிலையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தம்பி வேலாயுதம் மீது சமூக விரோதிகள் நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்கள் மீது அடுத்தடுத்து நடைபெறும் கொலைவெறித் தாக்குதல்களைத் தடுக்கத்தவறி வேடிக்கைப் பார்க்கும் தவெக அரசின் செயலற்றத்தன்மை வன்மையான கண்டனத்துக்குரியது.
சமூக ஆர்வலர் தம்பி வேலாயுதம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அரசு நிர்வாகத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல் முறைகேடுகளைத் துணிவுடன் வெளிக்கொணர்ந்து வந்த சமூக அக்கறை கொண்ட இளைஞராவார். இளம் வயதிலேயே மண்ணின் மீதும், மக்களின் மீதும் பேரன்புகொண்டு, அவர் புரியும் பொதுத்தொண்டு மிகுந்த பாராட்டுக்குரியது. தம்பி வேலாயுதம் போன்று மக்கள் நலன் காக்க போராடும் மண்ணுரிமைப் போராளிகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமையும், பொறுப்புமாகும். ஆனால் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்களுக்குச் சிறிதும் பாதுகாப்பற்ற கொடுஞ்சூழல் நிலவுவது வெட்கக்கேடானது. கடந்த ஆட்சியில் திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. சமூக ஆர்வலர் ஜகுபர் அலி கனிமவளக் கொள்ளையர்களால் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இராமநாதபுரத்தைச் சேர்ந்த தம்பி ஜான் பிரிட்டோ மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தகைய கொடுநிலை தற்போதும் தொடர்வதுதான் பெருங்கொடுமையாகும்.
மணற்கொள்ளை, கனிமவளக் கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை, அரசு நிலம் ஆக்கிரமிப்பு, அரசு நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளென நாளும் நடைபெறும் சமூக அவலங்கள், குற்றங்களுக்கு எதிராகச் சட்டப்போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? தம்பி வேலாயுதம் போன்று சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தப்படுவதை தவெக அரசு தடுக்கத்தவறினால் மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் இனிவரும் இளந்தலைமுறையினருக்கு எப்படி வரும்?
ஆகவே, கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய தம்பி வேலாயுதம் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன். இனியும் இதுபோன்று கொலைவெறித் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க, சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கான தனிச்சட்டத்தை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

