கிராம ஊராட்சிகளின் சேவையை கணினி மூலம் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு..

 
govt

தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகளின் சேவையை கணினி மூலம் செயல்படுத்துமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் ஆணையர் தாரேஷ் அஹமது உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்  அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ஊரகப் பகுதிகளில் பொதுமக்கள் மனைப் பிரிவுகளுக்கான அனுமதி, கட்டிட அனுமதி, தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்தத் தேவையான அனுமதிகளை எளிதில் பெற ஒற்றைச் சாளர முறையில் இணைய தளம் மூலம் வழங்கப்படும் என்றும் கிராம ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணைய வழி மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்படும் என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை தற்போது ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ, ஊராட்சி செயலர் மூலமோ செலுத்த வேண்டியுள்ளது. இச்சேவைகள் அனைத்தும் இணைய வழியில் பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேற்காணும் அறிவிப்புகளுக்கு இணங்க கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக http://vptax.tnrd.tn.gov.in/ எனும் இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இந்த இணையதளத்தின் முழுமையான செயல்பாடுகள் நாளையில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.  

கிராம ஊராட்சிகளின் சேவையை கணினி மூலம் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு..

 இதன் மூலம் வீட்டு உரிமையாளர்கள், பயனர்கள், செலுத்த வேண்டிய வீட்டுவரித் தொகை, குடிநீர் கட்டணம், தொழில் வரி ஆகியவை இவ்விணைய தளத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ளீடு செய்யப்பட்டு உள்ளன. இதன்படி சுமார் 1.38 கோடி தரவுகள் உள்ளீடு செய்யப்பட்டு உள்ளன. இவ்விணையதளத்தின் மூலமாக கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் கீழ்காணும் வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்த இயலும்.  வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமக்கட்டணம், இதர வரியில்லா வருவாய் இனங்கள் என அனைத்து கட்டிட அனுமதிகளும் இணைய வழியாக மட்டுமே தரப்பட வேண்டும். இதற்காக http://online.ppa.tn.gov.in/ என்ற முகவரி உருவாக்கப்பட்டு உள்ளது. ஊரக பகுதிகளில் கட்டிட அனுமதி வழங்கிடும் பொறுப்பு கிராம ஊராட்சியின் செயல் அதிகாரிக்கு வழங்கப்பட்டு உள்ளது. கிராம ஊராட்சிகள் எந்த கட்டணத்தையும் இனிமேல் ரொக்கமாக பெறக்கூடாது. ஆன்லைன் மூலம்தான் பெற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.