மின்வெட்டை சரிசெய்ய 10 புதிய குழுக்களை அமைத்தது தமிழ்நாடு அரசு
மின்வெட்டை சரிசெய்ய 10 புதிய குழுக்களை அமைத்தது தமிழ்நாடு அரசு.

சென்னை ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் பல மணி நேரங்களுக்கு தினசரி மின்வெட்டு நடப்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இம்மாதம் பள்ளிகள் திறப்பதற்கு முதல் நாள் இரவு கூட இப்பகுதிகள் இருளில் மூழ்கியதால் மக்கள் கொந்தளித்து மின் வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டனர். ஏற்கனவே கோடை அனல் காற்றால் அவதிப்படும் மக்களுக்கு இந்த முன்னறிவிப்பிலாத மின்வெட்டால் கூடுதல் கஷ்டம் என அரசியல் கட்சியினர் தவெக அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர்.
இந்நிலையில் சென்னை முழுவதும் ஏற்படும் மின் தடையை கண்காணித்து மின் விநியோக சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 சிறப்பு குழுக்களை தமிழக அரசு அமைத்துள்ளது. பெரிய அளவிலான பழுதுகள் குறித்த தகவல்களை பெறுதல், மின்னகம் மற்றும் புகார் மையங்களில் பெறப்படும் புகார்களை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இக்குழு மேற்கொள்ளவுள்ளது. 500 பேர் கொண்ட 125 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க 10 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று மின்வாரிய தலைமை அலுவலகத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான அளவில் ஏற்படும் பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் ஏற்படும் மின் தடங்கல்களை உடனடியாக சீர் செய்யும் வகையில் 125 சிறப்பு மின்தடை பழுது சரிசெய்யும் ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை… pic.twitter.com/NkPaMWSFBw
— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) June 10, 2026
இதுதொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் தனது எக்ஸ் தளத்தில், “இன்று மின்வாரிய தலைமை அலுவலகத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான அளவில் ஏற்படும் பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் ஏற்படும் மின் தடங்கல்களை உடனடியாக சீர் செய்யும் வகையில் 125 சிறப்பு மின்தடை பழுது சரிசெய்யும் ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை துவக்கிவைக்கப்பட்டது. இந்த 125 ரோந்து வாகனங்களில் பழுதுகளை சரிசெய்ய தேவையான உபகரணங்கள் மற்றும் ரோந்து பணியில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் பணியமர்த்த பட்டுள்ளனர். இதை கண்காணிக்க 10 உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

