நங்கநல்லூரில் வருவாய்த்துறை நிலத்தை மெட்ரோவுக்கு மாற்ற ஒப்புதல் - தமிழக அரசு அரசாணை..

 
தமிழக அரசு

நங்கநல்லூரில் உள்ள 4,546 ச.மீட்டர் வருவாய்த்துறைக்குச் சொந்தமான  நிலத்தை  மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிரந்தர அடிப்படையில் மாற்ற ஒப்புதல் அளித்து  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முதல் கட்டத்தில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையத்திற்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு எவ்வளவு நிலம் தேவை என்ற விவரங்களை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு அரசிற்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதன்படி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்ட உயர்நிலை அதிகாரக்குழு, தலைமை செயலாளர் தலைமையில் கடந்த ஆண்டு 24வது கூட்டம் நடந்தது. இதில் சென்னை மாநகராட்சி நிலங்களை நிரந்தரம் மற்றும் தற்காலிக அடிப்படையில் மாற்றுவதற்கான சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கருத்துகள் விவாதிக்கப்பட்டது.

மெட்ரோ ரயில்

அதன்படி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஒவ்வொரு நில மாற்றக் கருத்துருவின் மீதும் உயர்நிலை அதிகாரக்குழு பரிந்துரைகளை அளித்துள்ளது. அதில் 4546 சதுர மீட்டர் வருவாய் துறையின் நிலம், நிரந்தர அடிப்படையில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்திற்காக உயர் நிலை அதிகாரக் குழுவால் நங்கநல்லூரில் உள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான 4546 சதுரமீட்டர் நிலத்தை பரிந்துரைத்துள்ளனர். இந்நிலையில் உயர்நிலை அதிகாரக் குழுவால் பரிந்துரை செய்த நிலத்தை அரசு பரிசீலனை செய்தது.

சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணி

அதனை ஏற்றுக் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம், பரங்கிமலை கன்டோன்மென்ட் கிராமம், ஜிஎஸ்டி சாலையில் 4546 சதுர மீட்டர்  அளவிலான வருவாய் துறையின் நிலத்தை, மெட்ரோ ரயில் திட்டத்திற்காக நிரந்தர அடிப்படையில் மாற்றுவதற்கான நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் வழித்தடத்தின் போக்கு, மெட்ரோ நிலையங்களின் வடிவமைப்பு போன்றவற்றை இறுதி செய்யும் போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நிலத்தின் அளவினை இறுதி செய்யும். அதன்படி நிலமாற்ற ஆணைகளை வெளியிடும் நடைமுறைகளில் காலதாமதம் ஆகும் என்பதால் அவசர அவசியத்தை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நிலத்திற்குள் முன்நுழைவு செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது” என்று அளிக்கப்படுகிறது.