மதுபானங்கள் மீது புதிய வரியை விதிக்க தமிழக அரசு முடிவு

 
tasmac

மதுபானங்கள் மீது ‘சுற்றுச் சூழல் மற்றும் சமூக நலத்தீமை’ என்ற புதிய வரியை விதிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

assembly


இதுதொடர்பாக வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுபான நுகர்வினாலும், அதிலிருந்து உருவாகும் கண்ணாடி மற்றும் நெகிழி கழிவுகளினாலும் ஏற்படும் மோசமான சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து அரசு மிகுந்த கவலை கொண்டுள்ளது. மதுபானக் கொள்கலன்களை முறையாக அப்புறப்படுத்தாததும், போதிய அளவில் மறுசுழற்சி செய்யாததும், வனவிலங்குகள் மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிப்பதுடன், சூழலியல் சீரழிவிற்கும் பெரும் காரணமாக அமைகிறது. என்பதும் அறியப்பட்டுள்ளது. மேலும், அத்தகைய மோசமான பாதிப்புகளைக் குறைப்பதற்கு மாநில அரசுக்கு உள்ள கடமையை பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள் வலியுறுத்தியுள்ளன. இந்த மோசமான சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகளைக் குறைப்பதற்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும் தகுந்த நிதி மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்றும் அரசு கருதுகிறது.

அதற்கிணங்க, மதுபான விற்பனையின் மீது 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை' எனும் தீர்வையை விதிக்க அரசு முன்மொழிந்துள்ளது. இந்தத் தீர்வை மூலம் கிடைக்கும் நிதி வருவாய், பின்வரும் நோக்கங்களுக்காக அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றிற்காகப் பயன்படுத்தப்படும், அவையாவன, (a) மதுபானக் கொள்கலன்களை முறையாக மறுசுழற்சி செய்தல், பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல் மற்றும் மறுபயன்பாடு ஆகியவற்றை எளிதாக்குதல்; (b) மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மதுப் பழக்க மீட்புத் திட்டங்கள்; (c) மதுப் பழக்க அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குதல்; (d) மது அருந்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் மற்றும் மதுபான அலகு கொள்கலன்களை முறையாக அப்புறப்படுத்தாததால் ஏற்படும் மோசமான சுற்றுச்சூழல் அபாயங்களை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு மற்றும் கல்விப் பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல்; (0) சூழலியல், காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுத்தல்; மற்றும் (1) விதிகளின் மூலம் வகுத்துரைக்கப்படலாகிற சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன் தொடர்புடைய ஏதேனும் பிற நோக்கங்கள். எனவே, அரசானது, கூறப்பட்ட நோக்கத்திற்காக, 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தை தகுந்தவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்குச் செயல் வடிவம் கொடுக்க விழைகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.